Breaking News


நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் அமைய வேண்டுமானால் தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அரசாங்க பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். 30 வீத விகிதாசார மற்றும் 70 வீத தொகுதி முறைக்கு செல்வது கட்டாயமானது என தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவத்தை பெற 12.5 வீத வாக்குகளைபெறுவதா அல்லது 5 வீத வாக்குகளை பெறுவதா என்ற விவாதத்தை விட, விகிதாசார மற்றும் தொகுதி முறையிலான இந்த தேர்தல் முறைக்கு செல்வதே பொருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாசா ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட 21,22ம் திருத்த சட்டமூலம் தொடர்பான தனிநபர் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்சவின் பிரேரணை அரசாங்கத்தினுடையதல்ல. அது தனிநபருடையது. ஆனால் அதில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய விடயங்கள் இருக்கின்றன என்பதை மறக்கக்கூடாது. அது தொடரப்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்த நாட்டில் இனவாதம், மதவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் மூலம் அரசியல் செய்யும் கலாசாரம் மாற வேண்டும். அந்த கலாசாரம் இருக்கும்வரை இலங்கை முன்னேற்றமடையாது. அந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற நாம் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். ஒருகாலத்தில் இந்த நாட்டின் சிறுபான்மையின மக்கள் பிரதான கட்சிகளின் உயர்பதவிகளில் இருந்தனர். பிரபல கல்வி அமைச்சராக மொஹமட் பதியுதீன் இருந்தார். அதேபோல, கதிர்காமர் பிரபல வெளிவிவகார அமைச்சராக இருந்தார்.

இப்படி பல பெயர்களை கூறிக்கொண்டே போகலாம். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது?

இன்று விஜேதாச ராஜபக்ச கொண்டு வந்துள்ள 12.5 வீத வாக்கு என்ற அடிப்படை தொடர்பில் பலர் பேசுகின்றனர். இது தொடர்பில் எம்மிடம் ஒரு வரைபிலக்கணம் உள்ளது.

1977ம் ஆண்டுக்கு பின்னர் ஒரேயொரு முறைதான் ஸ்திரமான அரசாங்கம் அமைந்தது. 1989ம் ஆண்டு கடும் வன்முறைக்கு மத்தியில் ஸ்திரமான அரசாங்கம் அமைந்தது. அதன்பின்னர் பலமான நாடாளுமன்றம் அமையவில்லை. இதற்கான காரணத்தை நாம் ஆராய வேண்டும். ஒரு தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சியினால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காவிடில் அங்கு குறைபாடு இருக்கிறது. அதனால் முதலில் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தேர்தல் முறை தொடர்பாக ஆராய்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். எனவே அந்த அறிக்கையை மீண்டும் களத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். அதாவது 30 வீத விகிதாசார முறை, 70 வீத தொகுதி முறையிலான தேர்தல் முறைக்கு செல்ல வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.