Breaking News


வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றி 50 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடியாக பெற்ற பணத்தை10 மனைவியர், 10 கள்ளக்காதலிகளுக்கு செலவு செய்ய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் அஸ்ரப் அலி (24). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவன நேர்முகத் தேர்வுக்கு சென்று திரும்பிய போது, பஸ்சில் உடன் பயணித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி, சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த டேவிட் (38) என்பவருடன் தொடர்பு கிடைத்தது.

அஸ்ரப் அலியின் மொபைல் எண்ணை பெற்ற டேவிட், அடிக்கடி பேசி வந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள, ‘ரெனால்ட் நிசான்’ கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதை நம்பி, 2019 மார்ச், 27 துவங்கி, மே 13 வரை, மூன்று தவணைகளாக 4.25 லட்சம் ரூபாயை டேவிட்டிடம், அஸ்ரப் அலி கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை; பணத்தையும் கொடுக்கவில்லை. அஸ்ரப் அலி புகாரின்படி, சூரமங்கலம் போலீசார் டேவிட்டை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: பார்வையிழந்த டேவிட், பஸ் பயணியரிடம் பேச்சு கொடுத்து, மொபைல் போன் எண்களை பெற்று, அவர்களிடம் நட்பு ஏற்படுத்தி கொள்வார். தனக்கு அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கக்கூடிய அளவுக்கு ஆட்கள் இருப்பதாக கூறி, பணத்தை பெற்று மோசடியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஐந்து ஆண்டுகளில், 62 பேரிடம் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். சேலத்தில் ஆறு மனைவியர், கரூர், நாமக்கல், தர்மபுரி, ஈரோட்டில் தலா ஒரு மனைவி என மொத்தம், 10 மனைவியருடன் வசித்துள்ளார். இவர்கள் தவிர, இவருக்கு, சென்னை, பெங்களூரு, கரூர், நாமக்கல், ஈரோட்டில் தலா இரண்டு கள்ளக்காதலிகள் என, மொத்தம் 10 பேர் உள்ளனர். மோசடியில் கிடைக்கும் பணம் அனைத்தையும், மனைவியர், காதலிகளிடம் கொடுத்து உல்லாச வாழ்க்கையை அனுபவித்துள்ளார். இதை, அவர் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார் என்றார்கள்.

டேவிட்டின் வாக்குமூலத்தை கேட்ட பொலிசாருக்கு மட்டுமல்ல, அதை வாசிக்கும் அனைவருக்கும் தூக்கிவாரிப் போடத்தானே செய்யும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.