தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை விநியோகித்த, மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த துண்டு பிரசுரத்தில், “மலையகமும் எழுச்சியும் எழுச்சி என்பது மலையகத்துக்கு எட்டா கனியா”, ”நிமிர்ந்து நில், துணிந்து செல்…வாழும் வரை போராடு” உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.
துண்டுபிரசுரங்களை பொகவந்தலாவை நகரம் மற்றும் அங்குள்ள சில தோட்டப்பகுதிகளில் விநியோகித்து கொண்டிருந்த போதே, அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துண்டு பிரசுரத்தை, கணினியூடாக வடிவமைத்து, பிரதியெடுத்து கொடுத்த, தொடர்பாடல் நிலைய உரிமையாளர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.