Breaking News

நான் கோமாளியா?… விக்கிலீக்ஸ் சொல்வது என்ன?; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன?: சிவாஜிலிங்கம் பரபரப்பு தகவல்கள்!


என்னை கோமாளியென சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், கடந்தகாலத்தில் நான் செய்த முக்கியமான விடயங்களின்போது, இவர்கள் எல்லாம் எங்கிருந்தனர்? அதெல்லாம் கோமாளித்தனமானதா?

இப்படி சூடாக கேள்வியெழுப்பி, முளைத்து மூன்று நாள் ஆவதற்குள் தன்னை விமர்சிக்கும் பேஸ்புக் போராளிகளை ஒரு பிடி பிடித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இன்று யாழில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை சிலர் கோமாளியென்கிறார்கள். மர்மமாக நடப்பதாக கூறுகிறார்கள். நான் 15 தடவைகள் ஜெனீவா சென்று கோமாளியாட்டமா ஆடுகிறேன். எங்கள் சொந்த செலவில், கடன்பட்டு சென்று கோமாளியாட்டமா ஆடுகிறேன்?

இலங்கைக்கு ஜெனீவாவில் 2 வருடங்கள் காலஅவகாசம் கொடுக்க 2 முறை சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகித்த வடக்கு மாகாணசபையில், காலநீடிப்பு வழங்கக்கூடாது என்ற தீர்மானத்தை கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றியவன் நான்.

அதில் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை கொண்டு வர முடியாதென சுமந்திரன் கூறி, அதை சீ.வீ.கே ஐயா எழுத்துமூலம் எனக்கு தந்தார்.

நான் அதை கொண்டு வர முயல, “சிவாஜி கொஞ்சம் பொறுங்கள்“ என சம்பந்தன் ஐயா தடுத்தார். மாவையும் தடுத்தார். பொறுத்து முடியாத கட்டத்தில்தான்- இவர்கள் இனி தீர்மானத்தை கொண்டு வர மாட்டார்கள் என்ற கட்டத்தில்தான், பொறுமையிழந்து செங்கோலை தட்ட, அது விழுந்து உடைந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் ஐயா என்னைக் கூப்பிட்டு கேட்டார், “சிவாஜி இது ஏன் நடக்கிறது?“ என.

நான் சொன்னேன், எனது உரிமை மீறப்படுகிறது. எமது மக்களிற்கு நடந்தது இனப்படுகொலை. அது குறித்து அவருக்கு விளக்கமளித்தபோது, தனக்கு ஒரு மாதம் அவகாசம் தருமாறும், தானே இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டு வருகிறேன் என்றார். நான் கொண்டு வருவதை விட, நீங்கள் கொண்டு வருவதுதான் அதிகம் கவனிக்கப்படுமென நான் அவரிடம் சொன்னேன்.

இப்படியெல்லாம் நடந்தபோது, என்னை கோமாளியென நீங்கள் ஏன் சொல்லவில்லை? இவருக்கு மூளை குழம்பி கோமாளியாட்டம் ஆடுகிறார் என சொல்லவில்லை.

2010இல் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோதும், பணம் பெற்றதாக சொன்னார்கள். தேர்தல் காலத்தில் அமெரிக்க தூதர் பற்றீசியா அனுப்பியிருந்த கேபிளில், அரசையும், எதிர்தரப்பையும் சாராமல் தேர்தலில் போட்டியிடும்  ஒரேயொரு தமிழ் தலைவர் சிவாஜிலிங்கம்தான். பிரபாகரனின் உறவினர், நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சர்வதேச விசாரணை கோருகிறார். பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி, நஷ்டஈடு கிடைக்க வேண்டுமென கோருகிறார் என கூறியிருந்தார். 2010 நவம்பர் வெளியான விக்கிலீக்ஸ் செய்தியில் இது உள்ளது.

அந்த தகவல்களில், இரா.சம்பந்தன் சொல்கிறார்- சர்வதேச விசாரணை நல்ல விடயம். ஆனால் அதை நாடாளுமன்றத்திற்குள் நான் எழுப்பினால், என் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறியிருந்தார்.

பத்மினி சிதம்பரத்தை யாழ்ப்பாணத்தில் சந்தித்தபோது, சர்வதேச விசாரணை தேவையில்லையென குறிப்பிடப்பட்டிருந்தது. மனோ கணேசனும் சர்வதேச விசாரணை தேவையில்லையென குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்சில் உள்ளது.

மஹிந்த, கோட்டாபயவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப முயல்பவர்,எப்படி அவர்களிற்கு உதவுவார் என்பது அப்போது பலருக்கு தெரியவில்லை. ஆறேழு மாதங்களின் பின்னராவது சிலருக்கு புரிந்தது.  இப்போதும் அதே விதமாக சொல்கிறார்கள்.

2010 தேர்தலில் மஹிந்தவை ஆதரிப்பதில்லையென நான் கொண்டு வந்த தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் 18 எம்.பிக்களும் ஆதரித்தனர். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதில்லையென்ற எனது தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. சரத்திற்கு ஆதரவாக 10 வாக்கும், எதிராக 8 வாக்கும் கிடைத்தது. நான், சிறிகாந்தா, வினோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார், கிசோர் வாக்களித்தனர்.

இது நடந்த மறுநாள், கூட்டமைப்பின் 22 எம்.பிக்களில், 13 பேரை உட்கார வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

அன்று (ஜனவரி 7) காலையில்தான் தலைவர் பிரபாகரனின் தந்தையார் இறந்ததாக செய்தி வந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நான் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பினேன். தலைவர் பிரபாகரனின் சகோதரி கனடாவிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இப்பொழுது என்ன செய்யலாமென கேட்டார். நீங்கள் விரும்புவதை போல செய்யலாமென்றேன்.

அவர்களின் உடலை வேறிடங்களிற்கு அனுப்ப வேண்டாம், வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியை செய்வதுதான் சரி. நீங்கள் அதை செய்யுங்கள் என்றார்.

அப்போது, அரசாங்கம் உடலை தர மறுத்து, கொழும்பில் இறுதிக்கிரியை செய்ய வேண்டுமென்றது. ஜனாதிபதி வேட்பாளரான நான், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக சொன்ன பின்னர், ஒரு மணித்தியாலத்தின் பின் உடலை தந்தார்கள்.

ஒவ்வொரு இடமாக உடலை கொண்டு செல்லக்கூடாது, வல்வெட்டித்துறையில் உடனடியாக உடலை தகனம் செய்ய வேண்டும், தலைவரின் தாயார் எனது பொறுப்பில் இருக்க வேண்டுமென இராணுவத்திற்கும் எனக்கும் ஒப்பதமிடப்பட்டது. அதை வீடியோ பதிவும் செய்தார்கள்.

அவரது உடலை கொண்டு செல்ல அமரர் ஊர்தியும், தாயாரை கொண்டு செல்ல அம்யூலன்சும் தருவதாக இராணுவம் சொன்னது. நான் மறுத்து வாடகைக்கு வாகனத்தை எடுத்தேன். சிங்கள பகுதியில் கலவரம் நடக்கும் என எம்மை பின்தொடர்ந்தார்கள்.

தலைவர் பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூர் கூட்டிச்சென்று, மகளால் மலேசியாவிற்கு கூட்டிச்செல்லப்பட்டு, இந்தியாவிற்கு கொண்டு செல்ல, கருணாநிதியால் திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் மலேசியா சென்று அழைத்து வந்தேனே.

திருமதி மதிவதனி பிரபாகரனின் தாயார், வந்தாறுமூலையில் தங்கியிருந்த வீட்டில் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, மதிவதனியின் சகோதரி லண்டனில் இருந்து தொலைபேசியில் எனக்கு தகவல் தந்தார். அங்கு சென்றபோது, கருணாவினால் சுட்டுக்கொல்லப்படும் ஆபத்திருந்தது. நான் மட்டக்களப்பு நகரத்திற்கு தப்பி வந்து, பின்னர் விக்ரமபாகு கருணாரத்னவுடன் அங்கு சென்றேன். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.

அந்த தேர்தல் நெருக்கடிக்குள்ளும் அவரை அழைத்து சென்று, மாலைதீவில் வைத்து உறவினர்களிடம் கையளித்தேன்.

இப்படி செய்தபோதெல்லாம் இவர் கோமாளி, துரோகியென ஏன் சொல்லவில்லை?

அவரை வெளிநாட்டில் ஒப்படைத்து விட்டு திரும்பி வந்தபோது, கட்டுநாயக்காவில் விசாரணையாளர்கள் என்னை விசாரித்தார்கள். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறதென கேட்டார்கள். நான் சாப்பிட்ட பில்களை காட்டி, என்னிடமிருந்த இரண்டு டொலர் பணத்தையும் காட்ட, விசாரணையை முடித்துக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள்.

நான் இதையெல்லாம் செய்யதபோது, யாரும் நன்மை சொல்லவில்லை. அது எனக்கு பிரச்சனையில்லை“ என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.