Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 4 நவம்பர், 2019

தமிழுக்கு முதலிடம் வழங்குவதை பொறுக்காதவர்கள் எப்படி தமிழர்களுக்கு தீர்வை தருவார்கள் – ஹக்கீம்

  admin       திங்கள், 4 நவம்பர், 2019


யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் கொடுத்ததை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (04) முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

தமிழ் மக்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்படுவதை எதிரணியினாரல் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தை நாட்டுப்புற சிங்கள மக்கள் ஊதிப்பெருப்பித்து வாக்குச் சேர்க்கும் வேலையை அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.

சிறுபான்மையினரை இலக்குவைத்து இனவாத தேர்தல் பிரசாரம் செய்கின்ற கும்பல்கள் எதிரணியைச் சூழ்ந்து கிடக்கின்றன. தமிழ், சிங்கள மொழிகளுக்கு சமஅந்தஸ்து என்பது இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பது இவர்களுக்கு தெரியாமலா இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

காணாமலாக்கப்பட்டோரை கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அறிவுறுத்தியது. அந்த அலுவலகம் அமைவதைக்கூட எதிரணயிலுள்ளவர்கள் எதிர்த்தனர். இவர்கள் எந்த முகத்துடன் உங்களிடம் வாக்கு கேட்கிறார்கள் என்று நீங்கள் கேட்கவேண்டும்.

யுத்த காலத்தில் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எதிரணி வேட்பாளரிடம் கேட்டபோது அவர் வாய்விட்டு சிரிக்கிறார். சகோதரரை திரும்பி பார்க்கிறார். அவரிடமிருந்து பதில் வரவில்லை. நான் யுத்தம் செய்யவில்லை, இராணுவ தளபதிதான் யுத்தம் செய்தார் என்ற அவரின் பதில் மிகவும் கோழைத்தனமானது.

நாட்டை பயங்கரவாதத்தலிருந்து மீட்டெடுத்தாக நெஞ்சைநிமிர்த்தி பிரசாரம் செய்பவர்கள், பிரச்சினைகள் என்று வரும்போது நான் யுத்தம் செய்யவில்லை என்று கோழைத்தனமாக பதிலளித்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இப்படியானவர்களின் கைகளில் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்கமுடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள்.

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் முல்லைதீவு மாவட்டத்தை தத்தெடுத்து, அங்கு தனது முகாமை அமைத்திருக்கிறார். படிப்படியாக புதிய குடியேற்றங்கள் நடைபெற்று, உங்களுக்கு தெரியாமலேயே காணி அபகரிப்பு நடைபெறும். இந்த விடயத்தில் நீங்கள் மிகவும் உசாராக இருக்கவேண்டும்.

முல்லைத்தீவில், கேப்பாபிளவில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு தமிழ் மக்கள் கடந்த பத்து வருடங்களாக போராடிவருகிறார்கள். அந்தப் போராட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதில் 53 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் எஞ்சியிருக்கின்றன.

கேப்பாபிளவு காணிகளை விடுவிப்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் இயன்றவரை விட்டுக்கொடுப்புடன் நடந்தமையால்தான் பிரச்சினை இந்தளவில் நிற்கிறது. கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் ஒரு அங்குலம் நிலத்தையேனும் விடுவிப்பதற்கான எந்தவொரு சாத்தியமும் இருந்திருக்கமாட்டாது.

நாட்டின் பாதுகாப்புக்காக என்று படையினர் கேப்பாபிளவில் மாத்திரம் காணிகளை அபகரிக்கவில்லை. வடக்கு, கிழக்கில் வனபரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியில் திணைக்களம் போன்றன அப்பாவி மக்களின் ஜீவனோபாய காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியுள்ளன.

முல்லைத்தீவு நகரில் 160 கோடி ரூபா செலவில் பாரிய நீர் வழங்கல் திட்டம் தயாராகிக்கொண்டிருக்கிறது. புதுக்குடியிருப்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நீர் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் திறந்துவைக்கவுள்ளோம். முல்லைத்தீவு நகரில் 8 ஆயிரம் நீர் இணைப்புகளை வழங்குவதற்கு பாரிய நீர்த்தாங்கியொன்று அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கான நிதியை வைத்துக்கொண்டு பயனாளிகளை தேடிக்கொண்டிருக்கிறோம். முல்லைத்தீவில் யாருக்காவது மலசலகூட வசதிகள் இல்லாவிட்டால், நீங்கள் உடனடியாக பிரதேச செயலாளர் ஊடாக எங்களது அலுவலகத்தில் விண்ணப்பித்து அதனை அமைத்துக்கொள்ளுங்கள்.

ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு விமோசனங்கள் கிடைத்தன. அரச தொழில்வாய்ப்பில் தமிழர்களுக்கு பங்கீடு மாத்திரமல்ல, மலையக தமிழர்களின் பிரஜாவுரிமை முழுமையாக மீட்டுக்கொடுக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை மதித்த ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச இருந்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழுக்கு முதலிடம் வழங்குவதை பொறுக்காதவர்கள் எப்படி தமிழர்களுக்கு தீர்வை தருவார்கள் – ஹக்கீம்

Previous
« Prev Post