Breaking News



கோட்டாபய மீது சுமத்தப்படும் வெள்ளை வான் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் 5 மாதத்தில் 50,000 இளைஞர்கள் கடத்திக் கொல்லப்பட்டார்கள். போர்க்காலத்தில்கூட அப்படியொரு சம்பவம் நடக்கவில்லையென தெரிவித்துள்ளார் அத்துரலிய ரத்ன தேரர்.

இன்று (4) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் கூட்டமைப்பினர் இனவாதத்தினை பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து பௌத்த மக்களின் ஒற்றுமைக்காக நான் செயற்பட்டு வருகின்றேன். இன்று வந்ததும் அதற்காகவே. இரண்டு நாட்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிற்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடினேன். அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்தேன். அவர்கள் ஏராளம் பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் தேசியகூட்டமைப்பினர் இதைப்பற்றியெல்லாம் அக்கறை செலுத்துவதில்லை.

விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் திண்டாடுகிறார்கள். மக்களிற்கு வீடுகள் இல்லை. வாழ்வாதாரம் இல்லை. ஒவ்வொருவரும் ஏராளம் பிரச்சனைகளுடன் வாழ்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதைப்பற்றியல்லவா பேசியிருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள்? இந்த மக்களைப்பற்றி கவனிப்பதில்லை. நாடாளுமன்றத்திற்கு வந்து இனவாதம் பேசுகிறார்கள். தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்குமிடையிலான நல்லுறவை பாதிப்படைய செய்கிறார்கள்.

அரசாங்கத்துடன் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசுக்கு அழுத்தம் கொடுத்து தேவையானதை பெற்றுக்கொள்கிறார்கள். அரசும் அவர்கள் சார்பாக செயற்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது மக்களிற்காக அரசாங்க்கத்துடன் பேசாது இனவாதத்தை மட்டுமே பேசி வருகிறார்கள்.

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளையும் பேசுபவரே எதிர்க்கட்சி தலைவர். ஆனால் அவர் தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக இனவாதமே பேசினார். மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் இதைப்பற்றி யோசிக்க வேண்டும். அவர் இதுவரை கிழக்கிலுள்ள தனது தமிழ் மக்களைப்பற்றி கதைத்தாரா?

கிழக்கிலுள்ள மக்கள் ஏராளம் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பெரும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். அதேவேளை, கிழக்கில் அமெரிக்க இராணுவத்தளம் அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியைப்பற்றியும் அவர் கதைக்கவில்லை. இவர்கள் வெளிநாட்டு சக்திகளின் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார்கள்.

சஜித் பிரேமதாசவுடன் யார் இருக்கிறார்கள்? முஸ்லிம் அடிப்படைவாதிகளே அந்தப்பக்கத்தில் உள்ளார்கள்.

தமிழ், சிங்கள உறவை பலப்படுத்த வேண்டுமென்றால் கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதே ஒரே வழி. தமிழ் மக்கள் மக்கள் கோட்டாவை ஆதரிக்க வேண்டும். தமிழ், சிங்கள இனங்கள் ஒன்றாக செயற்பட வேண்டுமென்பதற்காகவே நாம் கோட்டாவை ஆதரிக்க முடிவு செய்தோம் என்றார்.

இதன்போது, குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் வெள்ளை வாகனம் வருமென ரணில் யாழில் குறிப்பிட்டு வருவதை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்தபோது,

கோட்டாபய வெள்ளை வான் கலாச்சாரத்தை உருவாக்கினார் என்பது பொய்யானது. வெள்ளை வான் கலாச்சாரம் 1988-89ம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே உருவானது. அந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்தவர் ரணசிங்க பிறேமதாச. அவரது காலப்பகுதியில் ஐந்து மாதத்தில் ஐம்பதாயிரம் இளைஞர்கள் பலியாகினர். போர்க் காலத்தில் கூட இவ்வாறு நடக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முற்படுகின்றார். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சிங்கள ஒற்றுமையை பலப்படுத்த அவரை வெற்றியடைய செய்வோம்.

இதேவேளை தேர்தல் முடிவுகள் எவ்வாறு வந்தாலும் தமிழ்,சிங்கள உறவினை பலப்படுத்த எமது செயற்பாடு தொடரும் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.