Breaking News



இன்று நாட்டிலே அனைத்து சுதந்திரமும் உள்ளது. யார் வேண்டுமானாலும் யாரிடமும் கேள்வி கேட்கலாம். இந்த நிலை தொடர வேண்டுமானால் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக வேண்டும இந்த நாட்டிலே ஜனநாயகம் உருவாக வேண்டும். அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும்.

இவ்வாறு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மஸ்கெலிய சாமிமலை பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் பேசுகையில்,

சஜித் பிரேமதாச ஜனாதியானால் தோட்டத்தில் வேலையற்றவர்களுக்கும் தனி வீடுகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானில் தனி வீடும் கிடைக்காது. மாடி வீடு கட்டுவதற்கு இந்திய அரசு நிதியும் வழங்காது. தோட்டங்களில் வீடு கட்டுவதற்காக ஒரு தேயிலையை கூட கழட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் மலையகத்தில் எந்த ஒரு அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் இவர்கள் செய்யாததை இனிமேல் செய்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நான் இந்த அமைச்சை ஏற்று கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மலையகத்தில் தனி வீடுகள் கட்டி அதற்கான உறுதிப்பத்திரத்தையும் பெற்று கொடுத்துள்ளேன். பாதைகளை சீர் செய்து கொடுத்துள்ளேன். சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், முன் பள்ளி, பாடசாலைகள் போன்றவற்றை அமைத்து கொடுத்துள்ளேன்.

இனி வரும் காலங்களிலும் மேலும் பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க நாட்டை ஆளக்கூடிய மனித நேயமுமிக்க ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்யவேண்டும்.

சஜித் பிரேமதாசவிடம் மலையகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளேன். இவை அனைத்தையும் செய்து தருவதாக உறுதி வழங்கியுள்ளார் என்றார்.

மேலும் தீபாவளி முற்கொடுப்பனவு ஐயாயிரம் ரூபாய் சம்பந்தமான மக்களின் கேள்விக்கு அமைச்சர் திகாம்பரம் கருத்து தெரிவிக்கையில்,

நான் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். தோட்டமக்களின் கஷ்டங்களை நன்றாக உணர்ந்தவன் என்ற ரீதியில் தீபாவளி முற்க்கொடுப்பனவை ஐயாயிரம் ரூபாவாக அதிகரித்து கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு எனது சேவையை ஜீரணிக்க முடியாத சிலர் அதை கொடுக்க விடாமல் ஆப்பு வைத்தார்கள். அவர்கள் யார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் கடந்த பொதுத்தேர்தலில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றேன். இந்த முறை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகளை பெற்றுவிடுவேன் என்று என் மீது பொறாமை கொண்டவர்கள் இந்த இழிவான வேலையை செய்துள்ளனர்.

இந்த ஐயாயிரம் ரூபாவை நான் நிச்சயம் பெற்று கொடுப்பேன். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. என்னை நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை என்றார் .

No comments

Note: Only a member of this blog may post a comment.