Breaking News



எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சிக்காரராக செயற்படக் கூடாது. அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக செயற்பட வேண்டும். அவரது செயற்பாடுகளால் நாம் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கூட்டமைப்பிலுள்ள எந்த கட்சி சார்ந்த விமர்சனத்தையும் சமூக வலைத்தளங்களில் யாழ் மாவட்ட இளைஞர் அணியினர் எழுதக்கூடாது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியின் யாழ் மாவட்டக்குழுவும், மகளிர் அணியினரும் நேற்று (19) சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்கள். யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இதன்போது, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து இளைஞரணியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அரச தரப்புடன் இணைந்து, கம்பெரலிய திட்டங்களை, தேர்தலை இலக்காக வைத்தே செயற்படுகிறார்கள், உண்மையான அபிவிருத்தி எண்ணத்துடன் செயற்படவில்லை, இது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை பேசுவதை தவிர்க்கும்படி சில உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பிரதேசசபை தவிசாளர்கள் குறித்தும் இளைஞரணியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் ஐங்கரன் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வர்த்தகரை தவசாளராக்கி விட, அவர் தனது வர்த்தகத்திற்காக கொழும்பிலேயே தங்கியிருக்கிறார், பிரதேசசபை விவகாரங்களை கவனிப்பதில்லை, முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கிறார், இதனால் பிரதேசத்தில் கடுமையான அதிருப்திகள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பாக இளைஞரணியினர் பலர் கடுமையான அபிப்பிராயங்களை வெளியிட்டனர். அவர் ஐ.தே.க காரர் போல செயற்படுவதாகவும், ரணில் யாழ்ப்பாணம் வந்தபோது செய்தியாளர்களை சந்திதமைக்கெல்லாம் எதற்காக கூடச் செல்ல வேண்டுமென கடுமையான கருத்துக்களை பலர் வெளியிட்டனர்.

சுமந்திரனின் ஐ.தே.க செயற்பாடு தொடர்பாக மக்கள் கேள்வியெழுப்பும்போது, தம்மால் பதிலளிக்க முடியவில்லையென அவர்கள் குறைபட்டுக் கொண்டனர்.

அத்துடன், சுமந்திரனின் ஆதரவாளர்கள் என சில பேஸ்புக் செயற்பாட்டாளர்களின் செயற்பாட்டையும் இளைஞரணியினர் சுட்டிக்காட்டினர். சுமந்திரன் என்ன செய்தாலும், அதை பெருமையடிப்பதற்காக சில பேஸ்புக் செயற்பாட்டாளர்கள் பதிவிடுகிறார்கள், சுமந்திரன் ஹெலியில் சென்றதையெல்லாம் பெருமையான விடயமாக கருதி பேஸ்புக்கில் படத்தை பதிவிடுகிறார்கள், அதிலும் ஒருவர் ஆர்வக் கோளாற்றில் அன்ரன் பாலசிங்கம் ஹெலியில் செல்லும் படத்துடன் சுமந்திரன் செல்லும் படத்தையும் ஒப்பிட்டு பதிவிடுகிறார்கள். இந்த வகையானவர்கள்தான் சுமந்திரனை உசுப்பேற்றி கவிழ்க்கப் போகிறார்கள். இந்த செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் எமக்கு பதிலளிக்க முடியவில்லை. சினிமா காட்சிகளில் வடிவேலுவை அவருடன் கூட இருந்தவர்களே கவிழ்ப்பதை போலத்தான் இவர்கள் செயற்படுகிறார்கள் என பல உறுப்பினர்கள் குமுறினர்.

இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவதென்றும், பேஸ்புக்கில் ஆர்வக்கோளாற்றாக செயற்படுவர்கள் சிலரை குறிப்பிட்டு, அவர்களுடன் பேசி, வழிப்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளின் இளைஞரணியும் சந்தித்து பேசி, கூட்டாக மாநாடு நடத்தி, எதிர்காலத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டமைப்பை வலுப்படுத்த ஒவ்வொரு பிரதேசங்களிற்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்துவதென்றும் முடிவானது.

No comments

Note: Only a member of this blog may post a comment.