Breaking News


பூநகரி கௌதாரிமுனை பகுதியில் தனியார் ஒருவருக்கு பெருமளவு நிலம் வழங்கப்பட எடுக்கப்படும் முயற்சியையடுத்து,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று (20) அங்கு களவிஜயம் மேற்கொண்டார்.

அந்த பகுதி மக்களுடனான சந்திப்பின்போது, தமது பிரதேச காணிகளை தனியாருக்கு தாரைவார்க்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். அத்துடன், அங்கு காணிகளை பெற முயற்சிக்கும் தனியார் தரப்பிலிருந்து, “நாம் கோட்டாபயவின் ஆட்கள்“ என தம்மை அச்சுறுத்துவதாகவும் முறையிட்டுள்ளனர்.

கௌதாரிமுனையில் தனியார் ஒருவருக்கு 96 ஏக்கர் நிலம் வழங்க ஆளுனர் அலுவலகம் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது அரசியல்ரீதியான நிலம் வழங்கும் முயற்சியென பிரதேசவாசிகள் குற்றம்சுமத்துகிறார்கள்.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் நேற்று அந்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.

நிலம் வழங்குவது தொடர்பாக ஆளுனர் தம்மை அழைத்து பேசியபோது, “நான் இந்த ஜனாதிபதியின் ஆள். இந்த காணிகளை பெறவுள்ளவர் எதிர்கால ஜனாதிபதியின் ஆள்“ என தெரிவித்தார்கள் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

சோழர்கால வரலாற்று சான்றுகள் இன்றுமுள்ள வடக்கின் முக்கிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பூநகரி பகுதியே, சுமார் 3000 வருடங்களாக சந்ததி சந்ததியாக மக்கள் வாழும் தமிழர்களின் ஒரே பிரதேசமென வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதையும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், அரசியல் செல்வாக்கால் தமது வளங்கள் அழிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அந்த காணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டால் தமது வாழ்வாதாரம் அழிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தனியாருக்கு வழங்கப்படவுள்ள காணிகளை கொண்ட பகுதியின் ஒரு பகுதி, கடற்றொழிலாளர்களின் பாவனையில் உள்ளது. வள்ளங்களை நிறுத்துவது உள்ளிட்ட மீனவர்களின் அன்றாட நடவடிக்கைக்கு அந்த பகுதி மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன் அந்த பகுதி மக்களின் கால்நடைகளின் மேய்ச்சல்த்தரையும் அந்த பகுதியிலேயே உள்ளது.

குறிப்பிட்ட காணியை தனியாருக்கு வழங்குவதன் மூலம் தமது கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில்கள் பாதிக்கப்படுமென அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். சுமார் 200 குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன.

வீதியின் மறுபக்கத்தில் பெரும் மணல்த்திட்டுக்கள் காணப்படுகின்றன. அந்த பகுதியில் ஹோட்டலோ, பிற கட்டுமானங்களோ மேற்கொள்வதெனில் அந்த மண் கும்பிகளை முதலில் அந்த தனியார் விற்பனை செய்து, அகற்றுவார். இதன்மூலமே மிகப்பெரும் வருமானத்தை தனியார் ஈட்டிக்கொள்வார்.

யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் மணல்த்திட்டுக்களை அகற்றிய பின்னர் அங்கு குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டதாக, நேற்று மக்கள் சுட்டிக்காட்டினர்.

அந்த பகுதி காணியை தனியாருக்கு வழங்குவதில் ஆட்சேபணையில்லையென கிராமமக்கள் கையெழுத்திட்டு தர வேண்டுமென குறிப்பிட்ட தனியார் தமக்கு அழுத்தம் தருவதாகவும் நேற்று மக்கள் சுட்டிக்காட்டினார்.

பூநகரி பகுதியில் இயற்கை வளங்கள் முன்னைய மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அரசியல் செல்வாக்குள்ள தனியார்களிற்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், சில அரசியல் புள்ளிகள் அங்கு காணிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணி வழங்கப்படும் இடத்திற்கு அருகாமையிலுள்ள பரமன்கிராய் வெட்டுக்காடு பகுதியில் தற்போதைய மேல் மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முசம்மில் 50 ஏக்கர் காணியை வாங்கி தென்னந்தோட்டம் உருவாக்கியுள்ளார்.

முன்னாள் கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மைத்துனர் அஜித் தென்னக்கோன் என்பவர் அங்கு 140 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து வைத்துள்ளார். அந்த காணியிலுள்ள மணலை விற்பனை செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை.

தற்போது கௌதாரிமுனையில் 96 ஏக்கர் அரச காணியை பெற்று ஹொட்டல் கட்ட முயற்சிக்கும் தனியாரான தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபர் பூநகரியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது காணி கோரம் இடத்திற்கு அருகாமையிலேயே வெட்டுக்காடு பகுதியில் அவருக்கு சொந்தமான 100 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளதாகவும், அவர் தனது காணியில் ஹொட்டல் கட்டாமல் எதற்காக அரச காணியை பெற முயற்சிக்கிறார் என்றும் மக்கள் கேள்வியெழுப்பினர்.

பொதுமக்களின் கருத்துக்களை அறிந்த சி.சிறிதரன், பிரதேசசபை உறுப்பினர் ஜெயகாந்தன் தலைமையில் குழுவொன்றை அமைத்து, இது தொடர்பான விஞ்ஞானரீதியான ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். பல்கலைகழக மாணவர்கள், துறைசார் நிபுணர்களை கொண்ட இந்த குழு, அந்த பகுதியில் தனியாருக்கு பெருமளவு நிலம் வழங்குவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அடுத்த கட்டமாக இது பற்றி ஆலோசிக்கலாமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், மக்களின் சுயவிருப்பற்ற நிலையில் அவர்களிடம் யாராவது கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதில்லையென்றும் குறிப்பிட்டார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.