onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Wednesday, August 7, 2019

Exclusive: ‘என்னிடம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்’; தமிழர்களிற்கான செய்தி: இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்தார் கோத்தபாய!

  admin       Wednesday, August 7, 2019


இதன் அடுத்த கட்டமாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பிற்கு கோத்தபாய தயாராகி வருகிறார் என்பதையும் தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

ஈ.பி.டி.பி, வரதர் அணி உள்ளிட்ட மஹிந்த ராஜபக்ச தரப்பின் தற்போதைய கூட்டணி கட்சிகளுடனான சந்திப்பை ஏற்கனவே நடத்தி முடித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, தற்போது தமிழ் தேசிய முகாமில் உள்ள கட்சிகளுடன் சந்திப்பை ஆரம்பித்துள்ளார்.

அதுதவிர, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையுடன் இணக்கமான போக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நெருக்கமான தரப்புக்களுடனும் சந்திப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழ் தேசிய தரப்புக்களை குறிவைத்து கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட சுமார் நான்கு சந்திப்புக்கள் குறித்த நம்பத்தகுந்த தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியும் சில தினங்களின் முன்பாக கோத்தபாய ராஜபக்சவை சந்தித்திருந்தது. அந்த சந்திப்பு குறித்த தகவல்களை, உடனடியாக தமிழ் அரசு கட்சியின் தலைமையிடம் ஜனநாயக போராளிகள் விலாவாரியாக தெரிவித்திருந்தனர்.

நான்கு சந்திப்புக்கள் தொடர்பான தகவல்களை சேகரித்ததில், தமிழ் மக்களின் இனப்பிரச்சனை விவகாரத்தில் கோத்தபாய ராஜபக்ச கொண்டிருக்கும் சித்திரத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மற்றும் தமிழ் மக்களிடம் கோத்தபாய ராஜபக்ச தெளிவான செய்தியொன்றை ஆரம்பத்திலேயே கொடுத்துள்ளார்.

“என்னிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்“ என்பதை சந்திப்புக்களில் வெளிப்படையாகவே கோத்தபாய தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை, சமூக மற்றும் பொருளாதார பிரச்சனையாக பாதுகாப்பு செயலராக இருந்தபோது கோத்தபாய புரிந்து வைத்திருந்ததை போலவே இப்பொழுதும் புரிந்து வைத்துள்ளார்.

சந்திப்பொன்றின்போது, “தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த எனது ஆட்சியில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் இந்து கலாச்சாரம் மாதிரியான அமைச்சுக்களை தவிர்த்து விட்டு, முஸ்லிம்கள் தேர்வுசெய்யும் அமைச்சுக்களை ஏற்க வேண்டும். அதன்மூலம் வடக்கு, கிழக்கில் அனேகமான பிரச்சனைகளை தீர்க்கலாம்“ என்றார்.

“வடக்கு மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமலுள்ளதாக பிரச்சனையுடன் இருக்கிறார்கள். இந்திய மீனவர்கள் வருவதால் மீன்பிடிக்க முடியாமலுள்ளதாக சொல்கிறார்கள். அதேபோல, தென்னிலங்கை சிங்கள மீனவர்களும் பிரச்சனையுடன் இருக்கிறார்கள். தமிழ் மீனவர்கள் வருவதால் மீன்பிடிக்க முடியாமலுள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள். உண்மையில் பிரச்சனை என்னவென்றால், இரண்டு தரப்பிற்கும் மீன்பிடிக்க தெரியாததே. அவர்கள் மிகப்பழைமையான மீன்பிடி முறைகளுடன் இருப்பதே பிரச்சனை. அவர்களிற்கு அதிநவீன மீன்பிடி முறைகளை கற்றுக்கொடுத்தால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும்“ என்றார்.

“புதிய அரசிலமைப்பை உருவாக்குவேன் என நான் பொய் சொல்லவில்லை. அதை நான் செய்யவேமாட்டேன். ஆனால், 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக நான் அமுல்படுத்துவேன். அதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. நான் பாதுகாப்பு செயலராக இருந்தபோதே, வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுக்கலாமென விரும்பினேன். அதை எம்.ஆரிடமும் (மஹிந்த ராஜபக்ச) கூறினேன். அவர் அதை விரும்பவில்லை.

13வது திருத்தத்தில் சொல்லப்பட்டளவில், ஒரு பொலிஸ் அதிகாரியை நியமிக்கும் அதிகாரத்துடன், மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் எந்த சிக்கலுமில்லை. ஆனால், காணி அதிகாரத்தை வழங்குவதில் சிக்கலுள்ளது. ஏனெனில், நான் ஜனாதிபதியானதும் மிகப்பிரமாண்டமானளவில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன். தெற்கின் தரத்திற்கு வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி, கல்வி திட்டங்களை கொண்டு வருவேன். அப்போது காணியை மாகாணசபை வைத்திருந்தால், அபிவிருத்தி திட்டங்களில் இழுபறியேற்படும். இப்படித்தான் கடந்த எமது ஆட்சியில் விக்னேஸ்வரனுடன் முரண்பட வேண்டியேற்பட்டது“ என்றார்.

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது தனக்கு ஒரு விவகாரமேயல்ல என்றும் தெரிவித்துள்ளார். எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் எந்த பொறுப்பையும் அவர் ஏற்கத் தயாராக இல்லை. இது குறித்து அவருடன் பேசப்பட்ட சமயத்தில், மௌனமாக அதை கடந்து சென்றார்.

நான்கு சந்திப்புக்களிலும், ஏன் தமிழ் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் என்பதை கோத்தபாய ராஜபக்ச துருவித்துருவி, அவர்களின் அபிப்பிராயத்தை தெரிந்து கொண்டார்.

தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெற்றியடையலாமென நம்பும் கோத்தபாய ராஜபக்ச, எனினும், தனக்கு தமிழ் வாக்குகள் ஏன் அவசியமென கருதுவதையும் குறிப்பிட்டுள்ளார். தனிச்சிங்கள வாக்குகளுடன் ஜனாதிபதியானால், சர்வதேச அங்கீகாரம்மிக்க ஜனாதிபதியாக தான் கருதப்பட மாட்டேன் என அவர் உணர்கிறார். இதன்மூலம் போர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட சர்வதேச நெருக்கடிகளில் தொடர்ந்தும் சம்பந்தப்பட வேண்டியிருக்குமென அவர் கருதுகிறார். குறைந்தபட்சம் 3 – 4 இலட்சம் தமிழ் வாக்குகள் கிடைக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்.

அவரது தேர்தல் சூத்திரத்தின்படி, கொழும்பு, இரத்தனபுரி, குருநாகல், கம்பஹா, மாத்தறை ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாக்கு அதிகரிப்பிற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வாக்கு சதவீதம் அதிகரித்தால், இலகுவாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையலாமென அவர் கருதுகிறார்.

விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்கும் எதிர்பார்ப்பில் கோத்தபாய இருக்கிறார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! Exclusive: ‘என்னிடம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்’; தமிழர்களிற்கான செய்தி: இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்தார் கோத்தபாய!

Previous
« Prev Post