Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

மூதூரினை கைப்பற்றிய பின்னர் ஸ்ரீலங்கா படையினர் செய்த கொடூரம்! கடும் கண்டனம் வெளியிடும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

  admin       வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் வைத்து ACF என்று அழைக்கப்படும் பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் தொண்டு நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேரை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தவறி வருவது தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரச படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதி இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டிருந்தது. எனினும் இதுவரை அந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படாத நிலையிலேயே சம்பவம் இடம்பெற்ற 13 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த கண்டனத்தை தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது.

சிறிலங்காவின் சட்டமா அதிபர் தப்புள டி லிவேரா கடந்த யூலை மாதம் 13 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு அவசரமாக அறிவுறுத்தலொன்றை விடுத்திருந்தார்.

அதில் மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர் படுகொலை, திருகோணமலை கரையோர வீதி ஐந்து மாணவர் படுகொலை, சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை உள்ளிட்ட நான்கு முக்கிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி திருகோணலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் வைத்து ஏ.சி.எப். என்ற பட்டினிக்கு எதிரான தொண்டு நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்னும் இரண்டு தினங்களில் 13 ஆண்டுகள் நிவைடையவுள்ளன.

குறித்த படுகொலைகளை சிறிலங்கா அரச படையினரே மேற்கொண்டதை சாட்சிகள் உறுதிப்படுத்தியிருந்தும் இதுவரை அந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படாதது தொடர்பில் கடும் ஆத்திரம் வெளியிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது.

இந்த படுகொலைகள் இடம்பெற்று பதின்மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும் இதுவரை 17 தொண்டுப் பணியாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சிறிலங்காவால் முடியவில்லை என தெரிவித்திருக்கும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டம் மற்றும் கொள்கை இயக்குனர் ஜேம்ஸ் ரோஸ், இதன் ஊடாக சர்வதேச நீதித்துறையின் உதவி ஸ்ரீலங்காவிற்கு அவசியமாகின்றது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுள்ளார்.

குறித்த தொண்டுப் பணியாளர்கள் சிறிலங்கா அரச படையினராலேயே படுகொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், மூதூரினை கைப்பற்றுவதற்காக ஸ்ரீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில்இடம்பெற்ற மோதல்களின் பின்னரே நான்கு பெண்கள் உட்பட 16 தமிழர்களும் ஒரு முஸ்லீம் பணியாளரும் மிகக் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் பட்டிணிக்கு எதிரான அமைப்பின் உள்ளூர் தொண்டுப் பணியாளர்களே இவ்வாயு கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த படுகொலை தொடர்பில் மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர் குழு முழுமையான அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. நேரில் பார்த்தவர்கள் மற்றும் ஆயுதங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா படையினரே இந்த படுகொலை செய்தனர் என மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர் குழு குற்றம்சாட்டியிருந்தது.

ஸ்ரீலங்கா கடற்படையின் விசேட படைப்பிரிவினரும் இரு காவல்துறை உத்தியோகத்தர்களும் இந்த படுகொலையுடன் தொடர்புபட்டிருப்பதாக ACF அமைப்பு குற்றம்சாட்டி வருவதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜுலை மாதம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் மூதூர் படுகொலை உள்ளிட்ட 16 முக்கிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்திருந்தார்.

எனினும் குறித்த ஆணைக்குழுவினால் மூதூர் படுகொலைத் தொடர்பிலான விசாரணைகளுக்கென அழைக்கப்பட்டவர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அது மாத்திரமன்றி சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணித்து வந்த சர்வதேச பிரதிநிதிகள் விசாரணைகளில் ஏற்பட்ட நம்பிக்கையீனம் காரணமாக அதிலிருந்து விலகிக்கொண்டதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் விடயங்களில் ஸ்ரீலங்காவின் நீதித்துறையின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லையென்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளிட்ட வெளிநாட்டு சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணக்கம் தெரிவித்து தீர்மானமொன்றையும் நிறைவேற்றியதையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி ஜேம்ஸ் ரோஸ் கோடிகாட்டியுள்ளார்.

இந்நிலையில், மூதூரில் படுகொலை செய்யப்பட்ட குறித்த 17 பணியாளர்களதும் குடும்பத்தவர்களும் ஏனையவர்களின் குடும்பத்தவர்களும் நீதி கிடைக்ககூடிய சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்டம் மற்றும் கொள்கை இயக்குனர் ஜேம்ஸ் ரோஸ் தெரிவித்ததுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மூதூரினை கைப்பற்றிய பின்னர் ஸ்ரீலங்கா படையினர் செய்த கொடூரம்! கடும் கண்டனம் வெளியிடும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

Previous
« Prev Post