Breaking Newsஏசிட்னி நகரின் மையப்பகுதியில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதுடன் மேலும் பலரைத் தாக்க முயன்ற நபரை பொலிஸார் கைதுசெய்தனர்.

நேற்று மதியம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிட்னி நகரில் அமைந்துள்ள corner of Clarence St & King St பகுதியிலுள்ள விடுதியில் வைத்து 41 வயதுப் பெண் ஒருவரை மாமிசம் வெட்டும் கத்தியால் தாக்கிய 21 வயது நபர், ஏனையவர்களையும் தாக்க முற்பட்டவேளையில் அங்கிருந்த பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தாக்குதலுக்குள்ளான பெண் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள கட்டடத்தில் 21 வயதுடைய பாலியல் தொழிலாளியொருவரையும் கழுத்தை வெட்டி அவர் படுகொலை செய்துள்ளார்.

அந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர்தான், சிட்னி நகரின் நடுப்பகுதியில் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூச்சலிட்டவாறு ஆட்களை கலைத்து கலைத்து குத்துவதற்கு ஓடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரை பின்னால் சென்று கத்தியால் குத்திவிட்டு, ஏனையோரை கலைத்துச்சென்றுபோது பொதுமக்கள் சுதாரித்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாகவும் சுமார் ஆறு நிமிடங்கள் இந்த நபர் மேலும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முயற்சிசெய்தபோதும் துணிச்சலாக மூன்று பொதுமகன்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றும் பொலீஸார் தெரிவித்தனர்.

குறித்த நபருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்றாலும் கடந்த சில மாதங்களாக அமெரிக்க – நியூஸிலாந்து நாடுகளில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பான காட்சிகளை இவர் பார்த்திருப்பது அவரிடமிருந்து மீட்கப்பட்ட யூ.எஸ்.பியிருந்து தெரியவந்திருப்பதாக பொலீஸார் கூறுகின்றனர்.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மேற்கு சிட்னியின் Marayong பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார் குறித்த தாக்குதலுக்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என கூறினர்.

இந்த நபர், முன்னரே சிறு குற்றங்களுக்காக பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தபோதும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அவரிடம் தடைசெய்யப்பட்ட knuckleduster மீட்கப்பட்டதை அடுத்து, அவர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து குறித்த நபர், ஒன்பது மாத நன்னடைத்தை உத்தரவில் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிக அண்மையில்கூட, அவரது சகோதரியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பொலீஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்றும் கடந்த ஏழாம் திகதி போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தியதால் அம்புலனஸ் மூலம் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தார் என்றும் பொலீஸார் தற்போது கூறியுள்ளனர்.

இந்நபர் உளநோயினால் கடுமையாக பீடிக்கப்பட்டிருந்தமையும் அதற்காக அவர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதும் பொலீஸாரினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிட்னியின் Marayong பகுதியில் தனது தாயாருடன் வசித்து வந்த இந்நபர் , கடந்த சில ஆண்டுகளாக வீடற்றவராக காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.