Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 12 ஜூலை, 2019

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை ஆதரித்தோம்!

  admin       வெள்ளி, 12 ஜூலை, 2019


நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியின் மீது நம்பிக்கை உண்டா இல்லையா என்கிற விவாதத்திற்காகக் கூடியிருக்கின்றோம். இந்த நிலை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வேறு வேறானவை. எந்தவொரு சிங்கள, பௌத்த ஆட்சியையும் தமிழர்களாகிய எங்களால் மானசீகமாக ஆதரிக்க முடியாது. பல்லின பலமத பலசமூக நாடாக இலங்கை ஆக்கப்படும்பொழுது ஆட்சியைப் பிடிக்கக்கூடிய நேர்மையான தரப்பு ஒன்றை மட்டுமே தமிழர்களால் ஆதரிக்க முடியுமே தவிர, இன்று அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் கட்சியையும் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முயற்சிக்கும் கட்சியையும் தமிழர்களால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.

ஆனால், அரசியலில் தமிழர்களின் நிலை இன்று பரிதாபகரமானது. அவர்களுக்கு முன்னால் உள்ள தெரிவு யார் நல்லவர் யார் கெட்டவர என்பதல்ல. இருக்கின்ற கெட்டவர்களில் யாரைத் தெரிந்தெடுப்பது என்பதுதான். இன்றைய ஆட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டுமா என்பதல்ல எம்முன் உள்ள கேள்வி, தமிழர்களுக்கு இதைவிட நரகத்தைத் தந்துவிடக்கூடியவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதே என்கிற பதற்றம்தான் எங்கள் முடிவுகளின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடியது. தெரியாத தேவதையைவிட தெரிந்த பேய்களே மேலானவை என்கிறது ஆங்கிலப் பழமொழி. தமிழர்களுக்கு முன்பாக உள்ளதோ தெரிந்த பேய்களும் நன்கு தெரிந்த பிணந்தின்னிப் பிசாசுகளும்தான். இதில் ஒன்றைத் தெரிந்தாக வேண்டும் என்பதுதான் தமிழர்களின் நிர்ப்பந்தம். எனவே களச் சூழல் தமிழர்களுக்கு நேர்மையான தெரிவுகள் எதனையும் விட்டுச் செல்லவில்லை.

ஆனால், இன்றைய ஆட்சியையும்கூட தமிழர்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் ஏன் ஆதரிக்க முடியாது என்பதை நான் இங்கு விளக்கவேண்டியது இந்தச் சந்தர்ப்பத்தில் அவசியம் என்று நினைக்கின்றேன். 2015ஆம் ஆண்டு புதிய ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதில் தமிழர்களும் மிக முக்கிய பங்காற்றினார்கள் என்பதும் ஏன் அந்தப் பங்கையாற்றினார்கள் என்பதும் உலகறிந்த ரகசியம். ஆனால், இன்றைய அரச தலைவரும் தலைமை அமைச்சரும் தமிழர்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்தவர்கள். தீர்வைத் தருகின்றோம், புதிய அரசமைப்பைக் கொண்டு வருகின்றோம் என்று நம்ப வைத்து நம்ப வைத்தே ஏமாற்றியவர்கள். ஏமாற்றுகின்ற சிங்களத் தலைவர்களின் வாரிசுகளாக அவர்களும் நம்பி ஏமாறுகின்ற தமிழ்த் தலைவர்களின் வாரிசுகளாக நாங்களும் இருக்கின்றோம் என்பதே இந்த நாட்டின் துரதிர்ஷ்டம்.

எம்மை நம்பவைத்து ஏமாற்றியது மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையையும் பன்னாட்டுச் சமூகத்தையும்கூட நம்ப வைத்து ஏமாற்றியது இந்த ஆட்சி. தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிலைமாறுகால நீதி இல்லாமலேயே அந்தக் காலம் கடந்து போய்க்கொண்டிருக்கின்றது. தமிழர்களின் படுகொலைகளுக்கு நீதி வழங்கப்படவேயில்லை. வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் நிறுத்தப்படவில்லை. அரச வேலை வாய்ப்புக்களில் தமிழர்களைப் புறந்தள்ளி, சிங்களவர்களுக்கே வாய்ப்புக் கொடுக்கும் போக்கு நிறுத்தப்படவில்லை, வடக்கு கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை சிதைக்கும் நோக்கோடு அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் இருக்கும் இடங்களைச் சிங்களமயமாக்குதல் தொடர்கின்றது. இப்படி தமிழர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு என்னென்ன நியாயங்களை எல்லாம் 30 வருடங்களுக்கு முன்னர் வைத்தார்களோ அவையெல்லாம் இன்றும் நவீன வடிவத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைவிட வேகமாக நிகழ்ந்து வரும் நிலைமைதான் தமிழர்களால் அதிகாரத்துக் கொண்டுவரப்பட்ட ஆட்சியின் சாதனை. அப்படிப்பட்ட ஒரு ஆட்சியைத் தமிழர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? கூடாதுதான். ஆனால், இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டால், அடுத்து வரப்போகின்ற ஆட்சி தமிழர்களை மீண்டும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கி சுத்தமாகத் துடைத்தழித்துவிடுவார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறதல்லவா? அதுதான் நிதானித்துச் சிந்திக்க வைக்கின்றது.

இன்று இந்த ஆட்சி தொடர்வதற்காக நாம் ஆதரவளிக்கும் ஒரு நிலை ஏற்பட்டால்கூட அது இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையால் அல்ல, நாம் அழித்தொழிக்கப்பட்டுவிடக்கூடாதே என்கிற அச்சத்தால் ஏற்படுகின்ற முடிவு என்பதை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்தவொரு சிங்கள, பௌத்த ஆட்சியின் மீதும் தமிழர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதுதான் எமது அறுதியும் இறுதியுமான முடிவு.

கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்தெழுகை நாளன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக எமது நாடு ஒரு பேரழிவுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக உயிர்ப்பலிகள், படுகொலைகள், சொத்திழப்புகள் எனப் பல நெருக்கடிகள் ஏற்பட்டமை மட்டுமன்றி எமது பொருளாதாரத்தின் பிரதான வருவாய் மூலமான சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இப்பெரும் பாதிப்பிலிருந்து மீண்டெழும் முயற்சியில் பங்குகொள்வது இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். ஆனால் சில இனவாத அமைப்புகளும் சில பௌத்த அமைப்புக்களும் இச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையா எனக் கேட்குமளவுக்கு முஸ்லிம்கள் அச்சத்துடனேயே வாழவும், நடமாடவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இப்படியாக ஒருபுறம் முஸ்லிம்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத ஒடுக்குமுறை மேலெழுந்துள்ள நிலையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் இது ஒரு சிங்கள தேசம் எனவும் தான் இதைக் கூறும் போது தமிழர்கள் கோபிக்கமட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். வடக்கு, கிழக்குத் தமிழர் தேசம் எனவும் ஏனைய பிரதேசங்கள் சிங்கள தேசம் எனவும் கூறியிருந்தால் நாம் கோபிக்கமாட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அவரின் வார்த்தைகளோ இந்த நாடு சிங்கள மக்களுக்கு வடக்கு, கிழக்குத் தமிழர் தேசம் எனவும் ஏனைய பிரதேசங்கள் சிங்கள தேசம் எனவும் கூறியிருந்தால் நாம் கோபிக்கமாட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அவரின் வார்த்தைகளோ இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான தேசம் எனவும் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இங்கு உரிமையில்லை என்பதையும் வலியுறுத்தும் வகையிலேயே அவரின் உரை அமைந்திருந்தது.

இந்த நிலையில் அவரின் கூற்றுக்கு அரசாங்கமோ எதிர்க்கட்சிக் கூட்டணியோ ஏன் ஜே.வி.பி.யினரோ கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்த நாட்டில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிமையில்லை என்ற கூற்றை அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்களா என நான் கேட்டு வைக்க விரும்புகிறேன்.

விரும்பியோ விரும்பாமலோ, மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ தமிழர்கள், முஸ்லிம்களின் உரிமைகளை மறுதலிக்கும் நீங்கள் எங்களை இந்த நாட்டுப் பிரஜைகளாக ஏற்க முழுமனதுடன் விருப்பம் கொள்ளாத நீங்கள் ஏன் உங்களுக்கு நெருக்கடி வரும் நேரங்களிலெல்லாம் எங்கள் ஆதரவைக் கோரி நிற்கிறீர்கள்.

2015இல் இந்த ஆட்சி அமைக்கப்பட்ட பின்பு நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினோம். வரவு – செலவுத் திட்டங்கள், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒக்ரோபர் 26இல் ஏற்படுத்தப்படவிருந்த ஆட்சி மாற்றம் என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசாங்கத்துக்கு உறுதியான ஆதரவை வழங்கி வந்திருக்கிறோம்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என வாக்களிக்கப்பட்டது. நாடாளுமன்ற அரசியலமைப்பு தெரிவுக்குழு எழுபது தடவைகளுக்கு மேல் கூடிக் கலைந்த நிலையில் நான்கு வருடங்கள் கடந்துவிட்டபோதும் அது ஆலோசனை என்ற அளவிலேயே உள்ளது. 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பு 1978இன் அரசியலமைப்பு என்பன ஒரு சில மாதங்களில் தயாரித்து நிறைவேற்றப்பட முடியுமானால் தற்போதைய அரசியல் அமைப்போ நான்கு வருடங்கள் கடந்தும் ஏன் உயிர்பெறவில்லை. இந்த நிலையில் தமிழ் மக்கள் தாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக உணர்வதில் என்ன தவறு இருக்க முடியும்.
அதேவேளையில், காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாக ஒரு நகர்வு கூட முன்நோக்கி மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் கைதிகள் எத்தனையோ போராட்டங்கள் நடத்திய பின் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்களிக்கப்பட்டது. ஆனால் கண்துடைப்புக்காக ஓரிருவரை புனர்வாழ்வுக்கு அனுப்பிவிட்டு பலருக்கு ஆயுள்தண்டனை, நூறு வருடம், இருநூறு வருடம் என கொடிய தண்டனைகள் வழங்கப்பட்டன. ஒருபகுதி காணிகள் விடுவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் பல முக்கிய இடங்களிலிருந்து படையினர் வெளியேற மறுக்கின்றனர். எமது மக்களோ நிவாரண முகாம்களில் அல்லற்படுகின்றனர்.
நாம் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எமது ஆதரவை உறுதியான முறையில் வழங்கி வந்தபோதிலும் நாம் தொடர்ந்து ஏமாற்றுப்பட்டே வந்துள்ளோம். தொடர்ந்தும் நாம் ஏமாற்றுப்படவேண்டுமா?

என் மதிப்புக்குரிய அரச தரப்பு உறுப்பினர்களே நாம் இப்போதும் உங்களுக்கு ஆதரவு தருவதன் மூலம் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்படவேண்டுமா? உங்களில் சிலர் இது சிங்கள பௌத்த தேசம் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள். அப்படியானால் உங்களுக்கே உரிய தேசத்தின் ஆட்சியைக் காப்பாற்ற ஏன் எங்களின் உதவியைக் கோருகின்றீர்கள்?

மதிப்புக்குரிய ஜே.வி.வி. தோழர்களே!

இந்த நம்பிக்கையில்லைாத் தீர்மானத்தை நீங்கள் முன்வைப்பதற்காகக் கூறும் காரணங்கள் நியாயமானவை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வாழ்க்கைச் செலவு உயர்வினால் எமது மக்கள் மூச்சுத் திணறுவதை நாங்கள் உணர்கிறோம். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் நாடு துண்டாடப்பட்டு விற்கப்படுவதை நாமும் ஏற்கிறோம். எதிர்காலத்தில் இலங்கை மேற்கு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஆயுத, பொருளாதார போட்டியில் மையமாக மாறுவதை நாமும் விரும்பவில்லை.

இந்த நிலையில் உங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட்டால் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? உங்களால் ஆட்சி அமைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அடுத்த்த தரப்பு மஹி்ந்த தரப்பு? மீண்டும் நாம் ராஜபக்ச சகோதரர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு வழி திறந்து விடவேண்டுமா?

ஆளும் தரப்பிடமும் எதிர்த்தரப்பினரிடமும் நாம் கேட்பது ஒன்றைத்தான் எமது உரிமைப் பிரச்சினைகளை நேர்மையாக அணுகுங்கள். நேர்மையாகத் தீர்க்க முயற்சி செய்யுங்கள் அப்போது எங்கள் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும் என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை ஆதரித்தோம்!

Previous
« Prev Post