Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 4 ஜூலை, 2019

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை போலவே சவாலை சந்திக்கும் தென்னன்மரவாடி முருகன் மலை: அதிரடியாக நுழைந்தது ரெலோ!

  admin       வியாழன், 4 ஜூலை, 2019


முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கும், தென்னமரவாடியிலுள்ள முருகன் மலைக்கும் நேற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட கிளையினர் பயணம் மேற்கொண்டனர்.

பௌத்த, இராணுவ மயமாக்கலின் மூலம் தமிழர் பாரம்பரிய தமிழர் பிரதேசங்களான இந்த பகுதிகள் தமிழ் மக்களின் வாழ்வுரிமையும், அடையாளங்களும் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. நில உரிமையை உறுதிசெய்ய பிரதேச மக்கள் பெரும் பிரயத்தனம் செய்து வரும் நிலையில், ரெலோ அமைப்பினர் நேற்று அங்க கள விஜயம் மேற்கொண்டனர்.

எம்.கே.சிவாஜிலிங்கம், சபா குகதாஸ் ஆகிய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், யாழ் மாவட்ட கிளை உறுப்பினர்கள் இந்த பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றுக்காலை யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் புறப்பட்ட இந்த அணி, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றது. அங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் தங்கியிருந்து பூசை வழிபாடுகள் மற்றும் சிரமதானப்பணிகளில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து தென்னன்மரவாடியிலுள்ள முருகன் மலைக்கு சென்றனர். அங்கு பேருந்தில் செல்ல முடியாது- முறையான பாதைகள் இல்லையென்பதால், பிரதேசவாசிகள் தமது உழவு இயந்திரத்தில் ரெலோ பிரதிநிதிகளை கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த பகுதியும் பாரம்பரிய தமிழர் பிரதேசமாகும். எனினும், யுத்த காலத்தில் அங்கிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்படட நிலையில், முருகன் மலையில் இருந்த வேல் கழற்றியெறிப்பட்டு, அங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் மலைக்கு வழிபாட்டுக்கு செல்லக்கூட அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள், ரெலோ பிரதிநிதிகளிடம் அச்சம் தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு தமிழ் தேசிய கட்சிகள் இருந்தாலும், எல்லைக்கிராமமொன்றில் வசிக்கும் அந்த மக்கள் தமது நில உரிமை உள்ளிட்டவற்றிற்கான போராட்டங்களை நடத்தவோ, கோரிக்கை முன்வைக்கவோ ஆதரவாக- அரசியல் தலைமைத்துவம் வழங்க- எந்த கட்சியும் அவர்களுடன் இருக்கவில்லையென்ற உண்மையை உணர்ந்து கொண்டதாக, அங்கு சென்ற ரெலோ பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

“பாரம்பரிய பிரதேசத்திலிருந்து 1983இல் விரட்டப்பட்ட இந்த பகுதி மக்கள் மீண்டும் திரும்பி வந்தபோது, அவர்களின் வீடுகள், விவசாய நிலங்கள் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. நீண்டகாலமாக சிங்களவர்கள் அங்கு வாழ்ந்து விட்டதால், அவர்கள் இந்த இடங்களை விட்டு போக மறுக்கிறார்கள். எமது நிலங்களை மீட்க முடியாமல் இருக்கிறோம். அரசியல், அரச அதிகாரிகள் யாருமே எமக்கு துணையில்லை. ஒரு காலத்தில் 150 குடும்பங்கள் இங்கு வசித்தன. இங்கு வாழ முடியாதென அரைவாசிக் குடும்பங்கள் வேறிடத்திற்கு சென்று விட்டன. இப்போது 80 குடும்பங்கள் வரையில்தான் வசிக்கிறோம். நிறுவனமயப்பட்டு நடக்கும் நில அபகரிப்பை, எந்த துணையுமில்லாமல், 80 குடும்பங்கள் எப்படி எதிர்க்க முடியும்?“ என அந்த பகுதி மக்கள் கேள்வியெழுப்பினர்.நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில்

யுத்தம் காரணமாக நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வசித்தவர்கள், இந்த வருடத்திற்குள் தமது காணிகளை உரிமைகோரி பெற்றுக்கொள்ள சட்ட ஏற்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ரெலோ பிரதிநிதிகள், இந்த விடயத்தில் சட்டரீதியான சகல ஏற்பாடுகளையும், துணையையும் வழங்குவோம் என உறுதியளித்தனர். இதன்படி, இம்மாத இறுதிக்குள் காணிகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியாதவர்களின் விபரங்களை தம்மிடம் ஒப்படைக்கும்படியும் தெரிவித்தனர்.

அத்துடன், முருகன் மலைக்கு ரெலோ பிரதிநிதிகள் சென்றபோது புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் இருந்ததாகவும், சிவாஜிலிங்கம் தனது பாணியில் அவர்களை எதிர்கொண்டு, அந்த இடத்திற்கு சென்றதாகவும் ரெலோ பிரதிநிதியொருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

முருகன் மலையில் வழிபட முடியாத நிலையுள்ளதால், மலையின் அடிவாரத்தில் சிறிய வழிபாட்டம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கையை, நிறைவேற்றித்தருவதாக ரெலோ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை போலவே சவாலை சந்திக்கும் தென்னன்மரவாடி முருகன் மலை: அதிரடியாக நுழைந்தது ரெலோ!

Previous
« Prev Post