onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, July 11, 2019

கல்முனை விவகாரத்தில் வென்றார் சம்பந்தர்! ஹரீஷ் எம்.பியும் இணக்கம்!

  admin       Thursday, July 11, 2019


தமிழ் தேசிய கூட்டமைப்பு உச்சபட்ச அழுத்தத்தை கொடுத்து கல்முனை விவகாரத்தில் நம்பிக்கைக்குரிய வாக்குறுதியை இன்று மாலையில் பெற்றது.

கல்முனை விவகாரத்தில் சாதகமான பதில் வழங்கப்படாவிட்டால் கூட்டமைப்பு அரசுக்கு எதிராக வாக்களிக்கும் என அழுத்தம் திருத்தமாக கூட்டமைப்பு தெரிவித்ததையடுத்து, நாளையே முறைப்படியான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதெனில், உறுதியான உத்தரவாதங்கள் தேவையென கூட்டமைப்பின் எம்.பிக்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் இன்று மாலை 5 மணியளவில் ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பு எம்.பிக்களிற்கிடையில் சந்திப்பொன்று நடந்தது.

இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் உடனிருந்தனர். நாளையே முறைப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, கணக்காளரை நியமிப்பதற்கு இதன்போது வாக்களிக்கப்பட்டது.

அத்துடன் அமைச்சின் செயலாளர்களிற்கும், நாளை கணக்காளர் நியமிக்கப்பட வேண்டியுள்ளதை அறிவித்தார்.

அத்துடன், கண்காளர் நியமிக்கப்பட்டு கல்முனை பிரதேச செயலகத்திற்கு தனியான வங்கிக்கணக்கு ஆரம்பிப்பதற்கு திறைசேரி செயலாளரின் அனுமதி தேவையாக இருந்தது. இன்று மாலை 6 மணிக்கு மங்கள சமரவீர அதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை, கல்முனை விவகாரத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த முஸ்லிம் காங்கிரசின் ஹரீஷ் எம்.பியும் பிரதமர் செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். முஸ்லிம் பிரமுகர்கள் அடங்கிய குழுவொன்றுடன் அவர் வந்திருந்தார். அந்த குழுவுடனும் பேச்சு நடத்தப்பட்டு, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்க அவர்களின் ஆதரவும் பெறப்பட்டது.

முதற்கட்டமாக கணக்காளரை நியமித்து, அடுத்த கட்டமாக எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் இரண்டு விடயங்களில் இன்று கூட்டமைப்பின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கன்னியா வெந்நீர் ஊற்றில் இன்று பிள்ளையார் ஆலயம் இடிக்கப்படுவதாக வெளியான செய்தியை பிரதமரிடம் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, தொலைபேசி வழியாக அந்த பணிகளை உடனடியாக நிறுத்தும்படி பிரதமர் உத்தரவிட்டார்.

ஓமந்தையில் சிங்கள பகுதிகளை உள்ளடக்கி தனியான சிங்கள பிரதேச செயலகத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வந்தது. அதை உடனடியாக நிறுத்தும்படி கூட்டமைப்பு வலியுறுத்தியது. உடனடியாக அந்த பணிகளையும் நிறுத்துவதற்கு பிரதமர் உடன்பட்டார்.
logoblog

Thanks for reading கல்முனை விவகாரத்தில் வென்றார் சம்பந்தர்! ஹரீஷ் எம்.பியும் இணக்கம்!

Previous
« Prev Post