Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Saturday, July 6, 2019

கிழக்கை முஸ்லிம்களிற்கு ஏன் கூட்டமைப்பு விட்டுக்கொடுத்தது?: விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

  admin       Saturday, July 6, 2019


அஷ்ரப் உயிரோடு இருந்த காலத்திலேயே தமிழரசுக் கட்சி தென் கிழக்கு மாகாணமொன்றை முஸ்லிம்களுக்குத் தாரை வார்க்க ஆயத்தமாக இருந்தது. அதன் காரணமாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதன் நம்பகத்தன்மையை நாங்கள் ஆய்ந்தறிய வேண்டும். அவ்வாறு அறிந்தால் கிழக்கு மாகாண சபையில் 11 தமிழ்ப் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு ஏழு பிரதிநிதிகளைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க சம்பந்தன் ஏன் முன்வந்தார் என்பது புரிந்துவிடும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

உரிமை அரசியல் வேண்டும் என்றவர்கள் எவ்வாறு டக்ளஸ் தேவானந்தா போல் சலுகை அரசியலுக்குள் உள் நுழைந்தார்களோ நான் அறியேன். டக்ளசை பச்சை பச்சையாய் துரோகி என்றவர்கள் எவ்வாறு இன்று அவர் வழியில் போகத் துணிந்து விட்டனர் என்றும் விளங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2013ம் ஆண்டில் நான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த போது எனது அமைச்சர்களை நியமிக்கும் பணி என்னைச் சார்ந்திருந்தது. என்னுடைய சக மாகாணசபை உறுப்பினர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதத்தினரை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. எனவே எல்லோரிடமும் அவர் அவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பையும் தகைமைகளையும் எழுத்தில் தருமாறு கேட்டிருந்தேன். தரப்பட்ட குறிப்புக்களில் என் கவனத்தை ஈர்த்தவர்களுள் ஒருவர் தான் திரு.ஐங்கரநேசன் அவர்கள்.

சூழல் மீதும் இயற்கை மீதும் அவருக்கிருந்த கரிசனை, பாண்டித்யம், பரிவு ஆகியனவற்றை நான் அவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். அதன் பின்னர் தான் அவரை விவசாய அமைச்சராக வரித்துக் கொண்டேன். பல்வேறு சம்பவங்கள், நிகழ்வுகள், கரிசனைகள் எம் ஒற்றுமையைக் குலைக்க எத்தனித்த போதும் பசுமை பற்றிய பற்றுதல், இயற்கை நோக்கிய இயைபு போன்றன எம்மை இன்று வரை ஒன்று சேர்த்தே வைத்திருக்கின்றது.

நண்பர் ஐங்கரநேசன் தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற பரிமாணத்தையும் உள்ளடக்கியுள்ளார். பசுமை இயக்கமாகப் பரிணமித்த அமைப்பு தற்போது அரசியல் கட்சியாகவும் பரிநாமம் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஒன்றாகச் செயற்பட்ட அமைப்புக்கள், கட்சிகள் அனைத்தும் அரசியலிலும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. தங்களுக்குள் இருக்கும் சில்லறைக் குறைபாடுகளை முன்னிறுத்தி எமது ஒற்றுமைக்கு எவரும் குந்தகம் விளைவிக்காது இருப்பார்களாக! அரசியல் ரீதியாக ஒரே விதமாகச் சிந்திப்பவர்கள் ஒன்றுபடாவிட்டால் சலுகை அரசியல் ஒன்றே தமிழர்களுக்கு முக்கியம் என்ற சிந்தனை எம் மக்களிடையே வேரூன்றி விடும்.
உரிமைகளுக்கான தமிழ் மக்களின் நீண்ட காலப் போராட்டம் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையிலும் அதே சமயம் ஒரு திருப்புமுனையிலும் இன்று நின்றுகொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய போராட்டத்தின் வரலாற்று நூலில் சிங்கள அரசாங்கங்களினால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்ட ஒரு அத்தியாயமும் அதே நேரத்தில் தமிழ் மக்களை தமிழ் அரசியல் தலைவர்கள் ஏமாற்றிய ஒரு அத்தியாயமும் எழுதப்படுவன என்று எதிர்பார்க்கலாம்.

வரலாற்றில் இருந்து எந்தப் படிப்பினைகளையுங் கவனத்தில் கொள்ளாமலும் மக்களின் ஆலோசனைகள், கருத்துக்களை உதாசீனம் செய்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டதன் விளைவுகள் பாரதூரமானவை. எவ்வாறு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திரத்துக்கு பின்னர் எம் கண் முன்பே பல்லாயிரக்கணக்கான எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டனவோ அதேபோல கடந்த 5 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் பதவிக்கு வந்து ஆட்சி நடத்திய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கண்களுக்கு முன்பாகவே வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்து குடியேற்றத் திட்டங்களை பாரியளவில் மேற்கொண்டுள்ளது. முல்லைத்தீவு மிக விரைவிலேயே தமிழ் மக்களின் கைகளை விட்டுச் செல்லும் அபாயம் இன்று ஏற்பட்டுள்ளது. மகாவலித் திட்டம் தற்போது முல்லைத்தீவு நகரத்தையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன், வடக்கு கிழக்கு நிலத்தொடர்பை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாட்டை மறுக்கும் நடவடிக்கைகளும் கடந்த சில வருடங்களாக மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசியக் கூட்டமைப்பு இந் நிகழ்வுகள் சம்பந்தமாக கரிசனை கொண்டிருக்கின்றது என்று நம்ப முடியாமல் இருக்கின்றது. காலஞ் சென்ற அஷ்ரப் உயிரோடு இருந்த காலத்திலேயே தமிழரசுக் கட்சி தென் கிழக்கு மாகாணமொன்றை முஸ்லீம்களுக்குத் தாரை வார்க்க ஆயத்தமாக இருந்தது என்றும் அதன் காரணமாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதன் நம்பகத்தன்மையை நாங்கள் ஆய்ந்தறிய வேண்டும். அவ்வாறு அறிந்தால் கிழக்கு மாகாண சபையில் 11 தமிழ்ப் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு ஏழு பிரதிநிதிகளைக் கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க திரு.சம்பந்தன் ஏன் முன்வந்தார் என்பது புரிந்துவிடும். இன்று கிழக்கில் தமிழ் மக்கள் நலிவுற பிறமக்கள் கோலோச்சுகின்றார்கள். தமிழ் மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இன அழிப்பு யுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்கள் எந்த நிவாரணங்களும் இன்றி அதே வலிகளுடனும், சுமைகளுடனும் இழப்புக்களுடனுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ராஜதந்திரம், விட்டுக்கொடுப்பு என்ற போர்வையில் தமிழ்த் தேசியத்தின் அடிப்படை கோட்பாடுகள் சிதைக்கப்பட்டுள்ளன.

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்ற வார்த்தைப் பிரயோகம் இன்று காணாமல் போய்விட்டது. சர்வதேச ரீதியான போர்க்குற்ற விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் இருந்து இலங்கை அரசாங்கம் காப்பாற்றப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்ந்தும் வீதியில் போராட அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்ற நிலைமையே தொடர்கிறது. இதனால்த் தான் எமது போராட்டம் மிகவும் இக்கட்டான ஒரு நிலைமையில் நின்று கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டேன்.

எனினும் இந்த இக்கட்டான நிலைமை எமது மக்களை இன்று விழிப்படையச் செய்துள்ளது. தாங்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டுள்ளதை அவர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளார்கள். சலுகைகளை விட உரிமைகளே பெரிது என்று இத்தனை காலமும் வலிகளை சுமந்துவந்த எமது மக்கள், இது எமது “தலைவிதி” என்று கூறி சோர்ந்து துவண்டு போகத் தயாராக இல்லை. தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கு அவர்கள் தயாராகி வருகின்றமையை அவர்களுடன் நான் மேற்கொண்டுவரும் சந்திப்புகளில் இருந்து புரிந்து கொண்டுள்ளேன். அதனால் தான் எமது போராட்டம் இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டேன்.

உரிமை அரசியல் வேண்டும் என்றவர்கள் எவ்வாறு திரு.டக்ளஸ் தேவானந்தா போல் சலுகை அரசியலுக்குள் உள் நுழைந்தார்களோ நான் அறியேன். டக்ளசை பச்சை பச்சையாய் “துரோகி” என்றவர்கள் எவ்வாறு இன்று அவர் வழியில் போகத் துணிந்து விட்டனர் என்றும் விளங்கவில்லை.

“தருவதைத் தா” என்று அரசாங்கத்திடம் மண்டியிடாமல் எமது உரிமைகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக வளங்கள் மற்றும் வாய்ப்புக்களின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்புக்களை நாம் மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஒத்த சிந்தனைகள், கருத்துக்கள் உடையவர்கள் ஐக்கியப்பட்டு உபாயங்களை வகுத்து செயற்பட வேண்டும். தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதியுடன் செயற்பட்ட ஏராளமான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் மற்றும் கலைஞர்களை நாம் இன்று இழந்துள்ளோம்.

இன்று எஞ்சி இருப்பவர்கள் சொற்ப அளவினரே. ஆகவே, நாம் பல அணிகளாகத் தனித் தனியே நின்று சாதிப்பதில் இருக்கும் கடினங்களை புரிந்துகொண்டு அடம்பன் கொடியாக திரண்டு மிடுக்காக எழுந்து நிற்க வேண்டும். புலம்பெயர் அமைப்புகளும் தமது அரசியல் பொருளாதார செயற்திட்டங்களை மறுசீரமைத்து, விரிவுபடுத்தி இளையோர்களை உள்ளீர்த்து செயற்படுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகின்றன. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை இன்றேல் அனைவர்க்குந் தாழ்வே மற்றும் குற்றம் பார்க்கில் சுற்றமில்லை போன்ற எமது மூதோர் மொழிகள் எம்மால் மீண்டும் சிந்திக்கப்பட வேண்டிய முதுமொழிகள்.

சுதந்திரம் கிடைக்க முன்பிருந்தே சிங்களத் தலைவர்கள் முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சம்பந்தமாக சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்கான வழி அமைப்பையும் அன்றே தயாரித்து விட்டார்கள். அந்த வழிபடத்தில் இருந்து வந்ததே 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம். இன்று கூட வடமாகாண சபைக்கு சிங்களம் மட்டும் கடிதங்கள் பல வந்து கொண்டிருக்கின்றன.

1970களில் கலாநிதி பதியுடீன் மஹ்மூத் கல்வி மந்திரி ஆனவுடன் முஸ்லீம் தலைவர்கள் தமது இனத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு, காணிகள் என்று பல விடயங்கள் பற்றியும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

கல்வியில் பெயர் போன எமது தமிழினம், திறமைக்குப் பெயர் போன எமது மூத்த இனம், நீயோ நானோ என்ற அகந்தை வழிப் போராட்டத்தில் திளைத்து எல்லாவற்றையும் கோட்டை விட்டு நிற்கின்றது. இன்று கூட “அவர்கள் வேண்டாம் நாம் மட்டும் தான்” என்ற அகந்தை ஒலி கேட்டுக் கொண்டே இருக்கின்றது. முஸ்லீம் தலைவர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையின் சிறப்பை வெளிக் கொண்டு வந்து விட்டார்கள். என்று தான் மாறுமோ தமிழர்தம் சிந்தனைகள்“ என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கிழக்கை முஸ்லிம்களிற்கு ஏன் கூட்டமைப்பு விட்டுக்கொடுத்தது?: விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

Previous
« Prev Post