onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Saturday, July 6, 2019

பிந்தி சென்ற மாணவர்களிற்கு வீதியில் தண்டனை; நியாயம் கேட்டவர்களை இராணுவம் அச்சுறுத்தியது: பூநகரி மக்கள் குற்றச்சாட்டு!

  admin       Saturday, July 6, 2019

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட முக்கொம்பன் மகாவித்தியாலத்தில் மாணவர்கள் தொடர்பான சர்ச்சையொன்றிற்கு, பாடசாலை நிர்வாகம் இராணுவத்தை அழைத்து தம்மை அச்சுறுத்தியதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். ஒழுங்கான பாதை வசதிகள் இல்லாத செக்காலை, அரசபுரம் ஆகிய கிராமத்திலிருந்து 4 கிலோமீற்றர் காட்டுப்பாதை வழியாக மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றனர்.

கிளிநொச்சியின் பல பிரதேசங்களிலும் உள்ள மாணவர்களின் போக்குவரத்து பிரச்சனையையடுத்து, அண்மையில் நிறுவனம் ஒன்றினால் கிளிநொச்சியில் 1000 மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இந்த பாடசாலையின் மாணவர்களிற்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில், கடந்த 4ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் வெளிவாயில் கதவு பூட்டப்பட்டு, தாமதமாக வந்தவர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர். சுமார் 20 மாணவர்களிற்கு வயது வேறுபாடின்றி பொதுமக்கள் முன்னிலையில் அதிபர் தடியால் அடித்து தண்டனை வழங்கினார்.

பாடசாலைக்கு வெளியில் இந்த சம்பவம் நடந்ததை கண்ணுற்ற பெற்றோரும், மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து சாரதியும் இது தொடர்பில் தட்டிக் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முறையான பாதை வசதி இன்மையால் மாணவர்கள் தாமதமாக சென்றதாகவும், பூநகரி காட்டுக்குள் வெளியிடங்களிலிருந்து யானைகள் கொண்டு வரப்பட்டு விடப்பட்டுள்ளதால் துவிச்சக்கர வண்டியில் வருவதற்கும் மாணவர்கள் அச்சமடைந்து, பேருந்திற்காக காத்திருந்து அதில் செல்வதாகவும் தாக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

இந்தநிலையில், மறுநாள் (5) அருகிலுள்ள முகாமிலுள்ள படையினர் பாடசாலை நிர்வாகத்தால் அழைக்கப்பட்டு, அதிபருடன் முரண்பட்ட பெற்றோர், மற்றும் இ.போ.ச சாரதி ஆகியோர் அச்சுறுத்தப்பட்டதாக அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாகவே பாடசாலையின் ஆரம்ப நேரத்திற்கு முன்னதாக வந்து சேரும் மாணவர்கள் தவிர ஏனையவர்கள், பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. தூர இடங்களில் இருந்து வரும் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் வீதியோரங்களில் நிற்பதாகவும் அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த பகுதியில் இன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


logoblog

Thanks for reading பிந்தி சென்ற மாணவர்களிற்கு வீதியில் தண்டனை; நியாயம் கேட்டவர்களை இராணுவம் அச்சுறுத்தியது: பூநகரி மக்கள் குற்றச்சாட்டு!

Previous
« Prev Post