onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, July 12, 2019

தெரிவுக்குழுவால் முதன்முறையாக வெளியாகவுள்ள அரச புலனாய்வு பிரதானியின் புகைப்படம்: பாதுகாப்பு தரப்பு கடும் அதிருப்தி!

  admin       Friday, July 12, 2019


நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கும்படி அரச புலனாய்வுத்துறையின் பிரதானி டிஐஜி நிலந்த ஜயவர்த்தன அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நேற்று தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கும்படி அவர் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், ஜனாதிபதியின் விசேட உத்தரவிற்கமைய அவர் முன்னிலையாகவில்லை. தற்போது பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, தான் திரும்பி வரும் வரையிலும் தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டாமென அரச புலனாய்வுத்துறையின் பிரதானிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, அவரை வரும் 24ம் திகதி முன்னிலையாகும்படி தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அவரை மாத்திரமன்றி, பயங்கரவாத, குற்றப்புலனாய்வு பிரிவு பிரதானிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வுத்துறை பிரதானி டிஐஜி நிலந்த ஜயவர்த்தனவின் புகைப்படங்கள் எதுவும் இதுவரை பகிரங்கமாக பகிரப்பட்டிருக்கவில்லை. இரகசிய புலனாய்வு சேவையின் பிரதானிகளின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லையென்ற அத்தியாவசிய நடைமுறையின் அடிப்படையில் அவரது விபரங்கள் இரகசியமாக பேணப்பட்டிருந்தன.

எனினும், நிலந்தவின் வாக்குமூலங்கள் ஊடகங்களின் முன் பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவுக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

இரகசிய புலனாய்வு சேவை பிரதானிகளின் விபரங்களை தெரிவுக்குழு பகிரங்கப்படுத்துவதாக, பாதுகாப்பு தரப்பிற்குள் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இது குறித்து ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அவர்கள் முறையிடவும் தீர்மானித்துள்ளனர்.

கடமையிலுள்ள பாதுகாப்பு பிரதானிகளை தெரிவக்குழுவின் முன் சாட்சியமளிக்க அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி முன்னர் கூறியிருந்தார். எனினும், விடாப்பிடியாக நிற்கும் ஐ.தே.க தரப்பு, ஜனாதிபதியும் தெரிவுக்குழு முன் முன்னிலையாக வேண்டுமென தெரிவித்து வந்தது. இதன்பின்னர் பெரும் அரசியல் மோதல் ஏற்பட்டிருந்தது. அமைச்சரவை கூட்டத்தையும் ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், மீண்டும் பாதுகாப்பு பிரதானிகளை தெரிவுக்குழு அழைத்துள்ளது அரசியல் மோதலை மட்டுமல்ல, பாதுகாப்பு தரப்பிற்குள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அரச புலனாய்வுத்துறை பிரதானியின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லையென்ற காரணத்தை முறியடிக்க, அவரது படத்தை வெளியிடும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தெரிவுக்குழுவில் உள்ள சரத் பொன்சேகா இதன் பின்னணியில் உள்ளதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கமாட்டேன் அது அலரிமாளிகையில் திரைக்கதை எழுதப்பட்ட நாடகம் என ஜனாதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logoblog

Thanks for reading தெரிவுக்குழுவால் முதன்முறையாக வெளியாகவுள்ள அரச புலனாய்வு பிரதானியின் புகைப்படம்: பாதுகாப்பு தரப்பு கடும் அதிருப்தி!

Previous
« Prev Post