நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மை இனம்! இன்றுவரை அச்சத்தில் உறைந்துள்ள முஸ்லிம் சமூகம்!

Thursday, June 13, 2019
Tags


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள மோசமான அழுத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது.

அதேவேளை ஊடகங்கள் வெளியிடும் உண்மைக்கு புறம்பான செய்திகளும் இந்த நிலமைகள் மேலும் தீவிரமடைவதற்கு துணைபோவதாகவும் குற்றம்சாட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இந்த நிலமைகள் காரணமாக சமாதானமும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அந்தத் தாக்குதல்களை காரணம் காட்டி சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையின சமூகங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகத்தை ஓரம்கட்டும் நடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தாக்குதல்களுடனும், தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய அடிப்படை மதவாத பயங்கரவாத அமைப்புக்களுடனும் எந்தவித தொடர்புகளுமே இல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை முஸ்லிம் மக்கள் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது இன்னமும் அச்சத்துடனேயே வாழ்ந்தும் வருகின்றனர். முஸ்லிம் மக்களின் இந்த நிலமைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் தனக்கு நேரில் முறையிட்டுள்ளதுடன், இந்த நிலமைகளை தாமதமின்றி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அவசர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், சாமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கருத்தில்கொள்ளாது, முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் மற்றும் மத ரீதியான அழுத்தங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவில் வாழும் அனைத்து சமூகங்களுடனும் சமாதானத்தையும், அவர்களின் இருப்பையும் பாதுகாக்கும் வகையில் செயற்படும் அனைத்து சிறிலங்கா பிரஜைகளுக்கும் தேவையான முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஐரோப்பிய ஒன்றியம் பெற்றுக்கொடுக்கும் என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பரஸ்பர கௌரவத்துடனும், நியாயமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், சட்டத்தின் கீழ் அனைவரும் சமமானவர்கள் என்பதை சிறிலங்காவில் வாழும் அனைத்து சமூகங்களும் நம்பிக்கைகொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதும் தமது நிலைப்பாடுகளை தெளிவாக எடுத்துரைத்ததாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, சுவிஸர்லாந்து, நோர்வே மற்றும் பிரித்தானிய தூதரகங்களினது முழுமையான இணக்கத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.