நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

குற்றங்கள் அனைத்தையும் மறுத்தார் நியூசிலாந்து மசூதி சூட்டாளர்!

Friday, June 14, 2019
Tagsகடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் நடந்த தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக 51 பேரை கொலை செய்தது, 40 பேர் மீது கொலை முயற்சி, ஒரு பயங்கரவாத குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பிரென்டன் டாரன்ட் மீது பதியப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டு வைக்கப்படுவது இதுவே முதல்முறை.

29 வயதாகும் அவுஸ்திரேலியரான பிரென்டன் சிறையில் இருந்து காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது வழக்குரைஞர் வாதத்தை எடுத்து வைத்தபோது பிரென்டன் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்காக கூடியிருந்த முஸ்லிம்கள் மீது ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் பாதிப்புக்குளானோரின் உறவினர்கள் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்தனர். பிரென்டன் வழக்குரைஞர் ஷேன் டைட், பிரென்டன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மறுப்பு தெரிவித்த போது நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது பலர் கண்ணீர் சிந்தினார்கள்.

அடுத்த ஆண்டு மே மாதம் நான்காம் திகதி வரை விசாரணை நடக்கும் என தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி கமரான் மாண்டெர், ஓகஸ்ட் 16ம் திகதி நடக்கும் வழக்கு ஆய்வு விசாரணை நடைபெறும் வரை பிரென்டனை சிறையில் வைக்க நீதிபதி மாண்டர் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டார்.

கடந்த வாரம், இந்த வழக்கின் சந்தேக நபர் குறித்த புகைப்படங்களை வெளியிடுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது .

தற்போது இந்த சந்தேக நபர் ஒக்லாந்து சிறையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறை நியூசிலாந்தின் கடுமையான சிறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.