onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Wednesday, May 8, 2019

ஹிஸ்புல்லாஹ்… காத்தான்குடி… அடையாள மாற்றம்: வன்முறைகளின் பின்னணி என்ன?

  admin       Wednesday, May 8, 2019


ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தின் முஸ்லிம் சமூகத்தின் ஓர் அசைக்க முடியாத தலைவனாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கடந்த 25 வருடத்திற்கு மேற்பட்ட அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளார் ஹிஸ்புல்லா. அவரது பிறப்பிடம் மற்றும் சொந்த அரசியல் தளமான காத்தான்குடியில் பயங்கரவாத முஸ்லிம் இனவாத அமைப்பொன்று வளர்ந்து, இன்று முழு நாட்டையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பெரும்பான்மை தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஹிஸ்புல்லா ஒரு இனவாத அரசியல் வாதியாகவே கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலக கருதப்பட்டு வருகின்றார். ஹிஸ்புல்லா- தமிழர்கள் எதிர்ப்புணர்வு நீண்ட சம்பவங்களையுடையது.

இலங்கை முஸ்லிம்களிற்குள்- குறிப்பாக கிழக்கில், அதிதீவிர முஸ்லிம் அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டதில் ஹிஸ்புல்லாவின் பங்கு பெரியது. தமிழ்- முஸ்லிம் மோதல் தீவிரம் பெறபெற, முஸ்லிம்கள் தங்களின் தனி அடையாளங்களை உருவாக்க தொடங்கினார்கள். இந்த வரலாற்று சம்பவத்தில் ஹிஸ்புல்லா, காத்தான்குடியின் பங்கு என்னவென்பதை விரிவாக ஆராய வேண்டும். இது அதற்கான தருணமல்ல என்பதால் தவிர்த்து விடுகிறோம்.

கடந்த 30 வருடத்தில் இலங்கை முஸ்லிம்களிற்குள் ஊடுருவிய, முஸ்லிம் அடிப்படைவாத இறக்குமதிகள் பலவற்றின் பின்னணி வரலாறு இதுதான்.

தமிழர்களுடனான முரண்பாட்டின் பின்னர் முஸ்லிம் தேசியவாதம் வளர்ச்சிபெற, அது தனது அடையாளங்களாக மத்திய கிழக்கு அதிதீவிர முஸ்லிம் அடையாளங்களை இறக்குமதி செய்தது. இந்த பண்பு மாற்றத்தில் அதிக செல்வாக்கு செலுத்திய ஒரே முஸ்லிம் அரசியல் தலைவர் ஹிஸ்புல்லாதான். காத்தான்குடியை ஒரு அரபு பகுதியாக பண்பு மாற்றம் செய்ததன் மூலம், இலங்கை நவீன முஸ்லிம் தேசியவாத உருவாக்கத்தில் ஹிஸ்புல்லா அதிக செல்வாக்கு செலுத்தினார். துரதிஷ்டவசமாக, நவீன முஸ்லிம் தேசியவாதத்தில் அடிப்படைவாத பண்புகள் மிகையாக இருந்தன.

இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள மத அடிப்படைவாத அச்சுறுத்தலுக்கு, ஆரம்ப புள்ளி இதுதான்.
 
முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து, கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாவின் பக்கம் பலரும் திரும்பிப் பார்த்ததன் காரணம்- அவர்தான் இந்த குண்டுகளை தயாரித்தார் என்பதல்ல. அவர்தான் தாக்குதலாளிகளை உருவாக்கினார் என்பதல்ல. அவர்தான் தாக்குதலாளிகளை மறைத்து வைத்திருந்தார் என்பதல்ல. இந்த அடிப்படைவாதிகள் உருவாகும் விதமாக, அடிப்படைவாத பண்புகள் நிரம்பிய தேசியவாத கருத்தொன்றை உருவாக்கினார் என்பதே ஹிஸ்புல்லா மீதான விமர்சனம்.

சில உள்சுற்று பேச்சுக்களில் ஹிஸ்புல்லா பேசிய வீடியோக்கள் சில இணையங்களில் உள்ளது. ஓட்டமாவடி காளி கோயிலை எப்படி இல்லாமல் செய்தேன் என்பதில் தொடங்கி, இரத்த ஆறு ஓடும் என்பது வரையான வீடியோக்கள் உள்ளன. நாய் வேசம் போட்டால் குரைத்துத்தான் ஆக வேண்டும் என்பதை போல, அதி தீவிர தேசியவாத கருத்துக்களை உருவாக்கிய பின்னர், அதன்படியே நடக்க வேண்டும் என்பதாலும் அவர் அப்படி பேசியிருக்கலாம்.

ஆனால், இலங்கை முஸ்லிம்கள், மத்திய கிழக்கு அரபு அடையாளங்களுடன் உருமாற்றப்பட்ட மையப்புள்ளியான காத்தான்குடிதான் இந்த வன்முறையின் மைய ஊற்றாக அமைந்துள்ளது. அதாவது ஹிஸ்புல்லாவின் கோட்டை!

ஹிஸ்புல்லா மீது வைக்கப்படும் விமர்சனம், சஹ்ரான் பற்றியதல்ல. ஹிஸ்புல்லாவின் காலத்தின் பின்னரும் காத்தான்குடியிலிருந்து இப்படியொரு வன்முறை இயக்கம் உருவாகினாலும், அப்போதும் ஹிஸ்புல்லா மீது விமர்சனம் வைக்கப்பட்டிருக்கும். இந்த விமர்சனத்திற்கே ஹிஸ்புல்லா பதிலளிக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாக இருந்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகம் பெருமளவு அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இந்தக்காலப்பகுதியில் பல அரச, தனியார் காணிகள் முஸ்லிம்களிற்கு விற்கவோ, வழங்கப்பட்டதாகவோ குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

காத்தான்குடி தனியான ஒரு அரச நிர்வாகத்தை போன்ற தோற்றத்தையும் பெற்றிருந்தது. சாதாரணமாக அங்கு பொலிசார் நுழைவதில்லை. சில பல ஆயுத செயற்பாடுகள் இருந்து கொண்டிருந்தது. முன்னைய ஜிகாத் தொடங்கி, பின்னைய ஐந்தாம் படை ஆட்கள் வரை செயற்பட்டார்கள். அடிப்படைவாத கருத்துக்கள், ஆயுததாரிகள் என இரண்டு புள்ளிகள் சந்திக்க, சில காலமாகவே இந்த பகுதிகளில் சில ஆயுத செயற்பாடுகள் பதிவாகிக் கொண்டிருந்தது.

ஆனால், அவை முழுமையான புலனாய்வு செய்யப்பட்டதா, சந்தேகநபர்கள் கைதானார்களா என்பது தெரியவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒல்லாந்தர் கால கோட்டையாக காணப்படும் மாவட்டச் செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வரலாற்று அடையாளங்கள் பல, காத்தான்குடி நகரத்தில் நிறுவப்பட்டுள்ள நூதன சாலையில்தான் உள்ளன. இவை மட்டக்களப்பின் வரலாற்றை மாற்றும் நூதன செயற்பாட்டின் ஒரு அங்கமாக என்ற கேள்வியும் உள்ளது.

2013ம் ஆண்டு மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற ஒரு நிறுவனத்தை 140 ஏக்கர் காணியில் அமைக்கும் திட்டத்தை ஹிஸ்புல்லா ஆரம்பித்தார். இந்த பல்கலைகழகத்திற்கு வழங்கப்பட்ட 140 ஏக்கர் காணிகளில் பெரும்பாலானவை தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள்.

கிரான் வடமுனை, முறுத்தானை, மயிந்தனை போன்ற பிரதேசங்களில் தமிழ்மக்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த நிலங்கள், மகாவலி அமைச்சின் ஊடாக அபகரிப்பட்டிருந்தது. பதுளையை சேர்ந்த தமிழ் மக்களும் அங்கு விவசாயம் செய்தனர். 1983 கலவரத்தின் பின்னர், அந்த இடத்திலிருந்து மட்டக்களப்பின் உட்புறமாக அவர்கள் குடியேறினர். யுத்தம் காரணமாக அங்கு அவர்கள் திரும்பிச் செல்ல முடியவில்லை. யுத்தம் முடிந்து திரும்பி செல்ல மக்கள் முயன்றபோதும், அந்த காணிகள் மகாவலி அமைச்சின் ஊடாக சுவீகரிக்கப்பட்டது. தமது நிலத்தை மீட்டுத்தரக் கோரி அந்த மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள், இப்போதைய கிழக்கு விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் ஆகியோரிடம் முறையிட்டும், அவர்கள் அதைப்பற்றி வாய் திறக்கக்கூட இல்லை.

2015ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அணியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான செயற்பாட்டளராக செயற்பட்டு, மைத்திரி தலைமயிலான கூட்டணியினை கடுமைய விமர்சனம் செய்து தேர்தல் நடவடிக்கையினை மேற் கொண்டிருந்தார்.  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் உருவான ஊழல் விசாரணைகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில், காத்தான்குடியில் இருந்த ஒரு பொறியியலாளர் தலைமையிலான அமைப்பு, ஹிஸ்புல்லாவின் ஊழல் மோசடி ஆவணங்களென சில ஆவணங்களை வெளிப்படுத்தி, முறைப்பாடு செய்தது.

பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு 54 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும், தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு சென்று இராஜாங்க அமைச்சராககி, 56 நாட்கள் அமைச்சரவையில் பிரதி அமைச்சராகி, இப்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுனராகியுள்ளார்.

ஆளுனராகிய பின்னர், தமிழ் மக்களிடமிருந்து அடாத்தாக பிடிக்கப்பட்ட காணிகளையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் கிராமமொன்றை உருவாக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கான சில ஆவணங்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. விரைவில் அவற்றை வெளியிடும்.

இதேவேளை, சஹ்ரான் குழுவுடன் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகளை ஹிஸ்புல்லா கடுமையாக நிராகரித்துள்ளார். அதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். தன்னை 54 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தத்தில சஹ்ரான் குழுவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் காத்தான்குடி நகரசபை தேர்தலில் 10இற்கும் மேற்பட்ட வட்டாரங்களை ஹிஸ்புல்லா தலைமையிலான சுதந்திரக்கட்சி வென்றதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கில்- குறிப்பாக காத்தான்குடியை மையப்படுத்தி ஆயுத செயற்பாடு இருந்தது, முஸ்லிம் ஜிகாத் அமைப்பு இருந்ததாக சொல்லப்பட்ட தகவல், ஜிகாத் குழு உறுப்பினர்கள் வடிவமாற்றம் பெற்று சஹ்ரான் குழுவில் இணைந்தார்களா என்பது எல்லாம் ஆழமான விசாரணைக்குரியவை. இதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் வந்தும், பாதுகாப்பு தரப்பு அக்கறை படாததன் பின்னணி என்ன, அதன் பின்னாலுள்ள அரசியல் என்பன ஆராயப்பட வேண்டும்.

வன்முறையை தவிர்க்க, இது மட்டும் உதவாது. சுய விமர்சனமும், விசாரணையும் அவசியம். தேசியவாதத்தின் பெயரால் உருவான தீவிரமான போக்கு, மத அடிப்படைவாதத்திற்கு வழிகோலியதா என்பதும் ஆராயப்பட வேண்டும்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஹிஸ்புல்லாஹ்… காத்தான்குடி… அடையாள மாற்றம்: வன்முறைகளின் பின்னணி என்ன?

Previous
« Prev Post