நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 8, 2019

வெளிநாட்டு அகதிகள் வவுனியாவிற்கு வேண்டாம்’: மக்கள் எதிர்ப்பையடுத்து கூட்டமைப்பும் நிலைப்பாட்டை மாற்றியது!வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைக்கும் யோசனையை, வவுனியாவின் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் வவுனியா அரசியல்வாதிகள் கூட்டாக நிராகரித்தனர். அகதிகள் விடயத்தில் மனிதாபிமானரீதியில் முடிவெடுக்க வேண்டுமென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தாலும், நேற்று கூட்டமைப்பினரும் அகதிகளை தங்க வைக்க கூடாதென்பதில் விடாப்பிடியாக நின்றனர்.

ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை வவுனியாவில் தங்க வைக்க அரசு ஆலோசித்து வரும் நிலையில், வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த திட்டம் இரகசியமாக கையாளப்பட்டு வந்த நிலையில் அவரே முதலில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

புனர்வாழ்வு நிலையமாக மாற்றப்பட்டுள்ள, பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் அகதிகளை தங்க வைப்பதை விடுத்து, அதை கூட்டுறவு திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.


 
சிவசக்தி அனந்தனின் எதிர்ப்பு வெளியான கையுடன், பதில் அறிக்கை வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அகதிகள் விவகாரம் மனிதாபிமானத்துடன் கையாளப்பட வேண்டும் என்றும், அகதிகளாக சென்ற ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வரவேற்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

எனினும், அகதிகளை வரவேற்பதில்லையென்ற முடிவை, வவுனியா நகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சிசபைகளும் எடுத்திருந்தன.

இந்தநிலையில் நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில், ரணில் அரசின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் வவுனியா நகரசபை தலைவர், இதர சபைகளின் தலைவர்களாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிசாளர்கள் கலந்து கொண்டனர். ரணில் அரசின் கலந்துரையாடல் என்பதால், வவுனியா மாவட்ட தமிழ் அரசு கட்சி தலைவர் ப.சத்தியலிங்கமும் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலில், அகதிகளை தங்க வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்ப்பு வெளியிட்டது.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!