நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 16, 2019

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும்படி ரிசாட் மூன்றுமுறை தொலைபேசியில் அழைத்தார்: இராணுவத்தளபதி அம்பலப்படுத்தினார்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. இரண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள். அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிசாட் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே இது குறித்த உண்மை என்ன என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில்-

“குறித்த அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

முதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது தடவையும் அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

இரண்டாவது தடவை கோரிக்கை விடுத்த பின்னரே, அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். அமைச்சர் மூன்றாவது தடவையும் அழைத்தபோது, இன்னும் இரண்டரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள். அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன்.

ஏனெனில் இராணுவத்தினரால் கைது செய்யப்படுபவர் இரண்டரை வருடங்கள் வரை தடுத்து வைக்கப்படலாம்.

இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை நான் அவதானித்தேன். குறித்த அமைச்சர் எனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்டது. ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளது. இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என்ற எனக்கு தெரியவில்லை. கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறிவிட்டேன் என்றார்.

கேள்வி:- யாரை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்

பதில்:- ஹ்ம்ம், அவர் கூறிய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, அங்கு எல்லாம் முஹம்மட்களாக இருந்தனர். அவர்களின் உரிய பெயர் எனக்கு தெரியவில்லை. எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் அனைவரும் நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். வன்முறையாளர்களை தூண்டுவதை போல இராணுவச்சீருடையணிந்த ஒருவர் செயற்பட்டது குறித்து இராணுவத்தளபதியிடம் கேட்கப்பட்டபோது,

“அது குறித்த விசாரணை 95 சதவீதம் முடிந்து விட்டது. உங்களை சந்திக்க வருவதற்கு முன்னர் பாதுகாப்புசபை கூட்டத்தில் அந்த வீடியோவை காண்பித்தேன். அவர் தனது துப்பாக்கி பட்டியை அணிவதே, வரச்சொல்வதை போல சைகை காண்பிப்பதாக தெரிந்துள்ளது“ என்றார்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!