நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, May 12, 2019

ஒரு அரசியல்வாதியும் எனக்கு உதவவில்லை… வியாழேந்திரனை தவிர: விடுதலையான அஜந்தன்!


வவுணதீவு பொலிசார் கொலை விவகாரத்தில் கடந்த ஐந்து மாதங்களாக அஜந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்ய வேண்டுமென பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

தனது கணவனின் விடுதலைக்காக அஜந்தனின் மனைவி போராட்டமும் நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின் சிக்கிய சஹ்ரானின் வாகன சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வவுணதீவு கொலையை தாமே நடத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அஜந்தனை விடுதலை செய்ய வேண்டுமென பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில், அஜந்தனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிடன் பேசியுள்ளதாகவும், அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அவரது கருத்திற்கு தமிழ் அரசு கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. அஜந்தனின் விடுதலை தொடர்பாக நாம் பேசி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை அறிந்து அமைச்சர் மனோ கணேசன் அரசியல் செய்கிறார் என்றார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த முரண்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் விடுதலையான அஜந்தன், அரசியல் தலைவர்கள் யாரும் தன்னுடைய விடுதலைக்கு உதவவில்லையென தெரிவித்துள்ளார். “விடுதலைக்கு உத்தரவிட்ட ஜனாதிபதிக்கு நன்றி செலுத்துகிறேன். விடுதலையான பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தொலைபேசியில் பேசினார்.

ஆனால் நான் கைதான பின்னர் என்னையும், குடும்பத்தையும் சந்தித்து ஆறுதலாக இருந்தது வியாழேந்திரன் எம்.பி மட்டும்தான். குடும்பத்தினர் என்ன தேவையென்றாலும் அவரை உடனடியாக சந்திக்க முடிந்தது. அவரும் உதவி செய்தார். என்னையும் பலமுறை வந்து சந்தித்தார்“ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று அஜந்தனை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீநேசன் ஒரு தொகை நிதியை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!