நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 22, 2019

நட்புறவுப் பாடசாலைகளை உருவாக்கிக் கொள்ள 2 வருட கால அவகாசம்- பிரதமர்

Wednesday, May 22, 2019
Tags


நாட்டின் கல்வி முறைமைக்கு சிங்கப்பூரின் கல்வி முறைமை மிகவும் சிறந்த முன்மாதிரியாகும் எனவும், இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கல்வி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று விரைவில் சிங்கப்பூர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

மதங்கள் மற்றும் மொழிகளின் அடிப்படையில் பாடசாலைகளை பிளவுப்படுத்தாது பொதுவான கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அதற்குத் தேவையான மூலோபாயங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதங்களை முன்னிலைப்படுத்தி பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற அடிப்படையில் பாடசாலைக் கல்வியை முன்கொண்டுசெல்ல வேண்டுமா? அல்லது பொதுவான கல்வி முறையொன்றின் கீழ் கொண்டுசெல்ல வேண்டுமா? என நாம் தீர்மானிக்க வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறி பாடசாலைகள் உட்பட அனைத்தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர தீர்மானித்துள்ளோம்.

 பாடசாலைகளுக்கு அறிஞர்களினதோ அல்லது மதத் தலைவர்களினதோ பெயரை வைப்பதில் பிரச்சினை இல்லை. என்றாலும், இனம், மதம் அடிப்படையில் பெயர்களை வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கி இன, மத அடிப்படையிலான பாடசாலைகளை பொதுவான பாடசாலைகளாக மாற்றிக்கொள்ள சந்தர்ப்பமளிக்க தீர்மானித்துள்ளோம். அனைவரும் நட்புறவுடன் கல்வி பயிலும் பாடசாலைகளை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.