நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 16, 2019

UPDATE: கரந்தாய் உள்நுழைவு போராட்டம்; கொட்டகை அமைத்து தங்கியுள்ள மக்களை வெளியேற்றுவதில்லையென தீர்மானம்!

Tuesday, April 16, 2019
Tags


மக்களின் உள்நுழைவு போராட்டத்தையடுத்து, இன்று மாலை பளை பிரதேசசெயலகத்தில் நடத்தப்பட்ட அவசர கலந்துரையாடலில், நீதிமன்ற மற்றும் நிர்வாக நடைமுறைகளின்படி தீர்வொன்றை எட்டும்வரை அந்த மக்கள் அங்கேயே தங்கியிருப்பதென்றும், அவர்களை அகற்ற தென்னை அபிவிருத்திச்சபை நடவடிக்கை எடுக்கக்கூடாதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பளை கரந்தாய் பகுதியில் குடியிருந்த மக்கள், 2010ஆம் ஆண்டு அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அவர்களின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டு, அவர்கள் குடியிருந்த காணிகள் தென்னை அபிவிருத்திச்சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது.

அவை அரச காணிகள்- தென்னை அபிவிருத்திசபைக்கு சொந்தமானவை- என குறிப்பிட்டே காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்களிடமிருந்து இவ்வாறு 100 ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஏற்கனவே தென்னை அபிவிருத்திசபைக்கு சொந்தமாக இருந்த 221 ஏக்கர் காணியுடன் இணைத்து, 321 ஏக்கர் காணியையும் தென்னை அபிவிருத்திச்சபை தனது பாவனையில் வைத்துள்ளது.

எனினும், அந்த காணிகள் பொதுமக்களிற்கு உரியவை என தொடர்ந்து பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். நாடாளுமன்றத்தில் இது குறித்த கவனயீர்ப்பு பிரேரணையொன்றை சி.சிறிதரன் சமர்ப்பித்திருந்தார். எனினும், அதில் 23 ஏக்கர் காணியே பொதுமக்களிற்கு சொந்தமானவை என, தென்னை அபிவிருத்திசபை விடாப்பிடியாக நின்றது.

அரசாங்கம் இந்த விவகாரத்தில் மெத்தன போக்குடன் இருக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டது. விவகாரத்தை ஆராய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு, அது பொதுமக்களிற்கு சொந்தமான எல்.ஆர்.சி காணிகள் என தீர்ப்பளித்திருந்தது. எனினும், தென்னை அபிவிருத்திசபை காணிகளை விட்டுக்கொடுக்கவில்லை.

இந்தநிலையிலேயே மக்கள் இன்று உள்நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர். ஏற்கனவே இரண்டு வருடங்களின் முன் நடந்த உள்நுழைவு போராட்டத்தின்போதும், தாம் தீர்வை பெற்றுத்தருவதாக கூறி, மக்களை வெளியேற்றியிருந்தனர். இன்று அதை பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.

பின்னர் பளை பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் நடந்த கலந்துரையாடலில், பளை பிரதேசசெயலர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் இணைப்பாளர், காணித்திணைக்கள அதிகாரிகள், தென்னை அபிவிருத்திசபை அதிகாரிகள், பிரதேச பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, மக்கள் அடாத்தாக நுழைந்துள்ளதாக தென்னை அபிவிருத்திசபை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மக்கள் அடாத்தான நுழைந்தார்கள் என்றால், நீங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கலாமே என கேள்வியெழுப்பிய சிறிதரன், இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் பாரப்படுத்தும்படி கேட்டார்.

எனினும், தென்னை அபிவிருத்திச்சபை அதிகாரிகள் அதில் உடன்படவில்லை.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் நிர்வாக, நீதிமன்றங்களின் ஊடாக தீர்வை எட்டும்வரை அந்த மக்களை அங்கிருந்து அகற்றக்கூடாதென தீர்மானிக்கப்பட்டது.

இன்றையதினம் சுமார் 60 குடும்பங்கள் அங்கு கொட்டகை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.