நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 8, 2019

UPDATE கோட்டா மீது அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் – அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவு!


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது மற்றுமொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பும் கோட்டாவுக்கு அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது.

சித்திரவதையில் இருந்து உயிர்பிழைத்த தமிழர் ஒருவரால் கனேடிய தமிழர் ஒருவரின் சார்பில் குறித்த வழக்கு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கனடா குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்ற றோய் சமாதானம் என்ற கனேடியத் தமிழர்,  கோட்டாவின் கட்டளையின் அடிப்படையில்  கடந்த 2007  ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் பலவந்தமாக ஒப்பதல் வாக்குமூலம் பெறப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டார் என்று குறித்த வழக்கில் தெரிவிக்கப்பபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு குறித்த வழக்கு தொடர்பாக சம்மதப்பட்ட நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கோட்டா மீது அமெரிக்காவில் வழக்கு – சிக்கலில் ராஜபக்ஷ குடும்பம்!

கோட்டாபய ராஜபக்ஷ மீது அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் சிக்கலில் ராஜபக்ஷ குடும்பம் தள்ளப்பட்டுள்ளது.

படுகொலைச் செய்யப்பட்ட, சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் தனது தந்தையான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட (திருமண) விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோட்டாவை நிறுத்துவதில் இந்த வழக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் எந்த வழக்கையும் தாம் தாக்கல் செய்யவில்லை என சண்டே லீடர் பத்திரிக்கையின் சிரேஷ்ட ஊடகவியலார் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்ரமதுங்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!