நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 2, 2019

"கிடைக்கும் நியமனத்தை புறக்கணிப்பவர்கள் யார்?"

Tuesday, April 02, 2019
Tags


இலங்கையில் தற்போது படித்து முடித்த, பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கான வேலையின்மை பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. ஆயினும், கிடைக்கும் வேலையை உதறித்தள்ளுபவர்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். கடந்த காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் வேலை கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்போதும் முன்னெடுத்துள்ளனர். பல கனவுகளுடன் படித்து பட்டம் பெற்றுவிட்டு அதற்குரிய வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமே. எனினும், மறுபுறம் சிலரது செயற்பாடு கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது.

பலரும் எப்படியாவது தமக்கு அரச வேலை ஒன்று கிடைத்தால் போதும் என அவற்றுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சிலர், வேலைக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றை புறக்கணிப்பது தான் கோபம் தருவதாக அமைந்திருக்கின்றது. வேலை கேட்டு போராடிவிட்டு நியமனம் கிடைத்தால் தமது நலன்களை கருத்தில் கொண்டு அதை புறம்தள்ளுவது என்னமாதிரியான மனநிலை என்று புரியவில்லை. அரச நியமனங்கள் வழங்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நியமனம் பெற்ற சிலர் தமது கடமைகளை பொறுப்பேற்காமல் விடும் செயற்பாடு அரங்கேறிக் கொண்டு தான் செல்கின்றது. குறிப்பாக அண்மையில் வடமாகாண ஆளுநரினால் ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொண்ட 311 பேரில் 60 பேர் வேலையில் இணைந்து கொள்ளவில்லை.

இவர்கள் ஏனையவர்களின் வாய்ப்புக்களை தட்டிப்பறித்துவிட்டு நியமனம் வழங்கப்பட்ட பிரதேசம் தூரமானது, கஷ்டப் பிரதேசங்களுக்கு செல்ல முடியாது போன்ற பல்வேறு காரணங்களை மனதில் கொண்டே இவ்வாறு செயற்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது. அத்துடன், சிலர் பிறிதொரு அரச சேவையில் இருந்து கொண்டு மற்றுமொரு அரச சேவைக்கு விண்ணப்பித்து நியமனம் பெற்ற பின்னர் மேற்குறிப்பிட்ட காரணங்களினால் பணிக்கு செல்லாமல் விடுகின்றனர். இவ்வாறு செயற்படுபவர்களில் சிலரது செயலுக்கான காரணங்கள் நியாயமாகக் கூட இருக்கலாம். ஆயினும், இந்த செயல்கள் ஏற்றுக் கொள்ள கூடியதானது கிடையாது. சிலரது காரணங்கள் நியாயமானதாக இருந்தாலும் பலரது காரணங்கள் நியாயமற்றதாகவே இருக்கும். 

இவர்களில் மிகவும் தூரமான பிரதேசம் என்ற காரணத்திற்காக நியமனம் கிடைத்த பின்னர் வேலைக்கு செல்லாமல் விடுவதை கூட ஏற்கலாம். ஆனால், கஸ்டப்பிரதேசம், அல்லது கஸ்டம் இருந்தாலும் சென்றுவரக்கூடிய பிரதேசங்களாக இருந்தும் அதனை புறக்கணிப்பவர்கள் மற்றும் பிறிதொரு அரச வேலையில் இருந்து கொண்டு இவ்வாறு செய்பவர்களை மன்னிக்கவே முடியாது.

அருகில் இருக்கும் பிரதேசங்களுக்கு நியமனம் வழங்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து விட்டு நியமனம் கிடைத்த பின்னர் அவற்றை புறக்கணிப்பதால், உண்மையில் எந்த பிரதேசம் என்றாலும் செல்லத் தயாராக இருப்பவர்களுக்கான வாய்ப்புக்கள் அந்த இடத்தில் பறிக்கப்படும் நிலை அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக ஆசிரியர் சேவையில் இணைய விரும்புபவர்கள் தமது நலன்களை மட்டும் கருத்தில் கொள்ள நினைப்பது பொருத்தமற்றது. எனவே, வேறு அரச வேலையில் இருப்பவர்கள் அல்லது தூர பிரதேசத்திற்கு செல்ல விரும்பாதவர்கள் இவற்றுக்கு விண்ணப்பிக்காமல் விட்டுவிடலாம். இப்படி செயற்படுபவர்களை அடையாளம் கண்டு மேலும் அரச சேவைக்கு விண்ணப்பிக்க விடாமல் செய்தால் என்ன என்ற ஒரு யோசனையும் என்னிடம் இருக்கின்றது. எனினும், அது தனி மனித உரிமையை பறிப்பதாக அமைந்துவிடும்.

அரச வேலையும் வேண்டும், அதிக சம்பளமும் வேண்டும், கஸ்டப் பிரதேசங்கள் வேண்டாம், தூர பிரதேசங்களுக்கு செல்ல மாட்டோம் என்று அடம்பிடிப்பது அபத்தமானது. அண்மையில் ஆளுநர் தான் மண்டைதீவுக்கு சென்ற போது "தன்னுடன் கூட வந்த அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு அங்கு வேலை தருவதாக கூறிய போது அவர் வேண்டாம் என மறுத்துவிட்டார்" என்று கூறினார். இப்படியாகத்தான் இந்த சுயநலமான உலகில் பலர் இருக்கின்றனர். தாம் பிறந்த ஊரில் வாய்ப்பு கிடைத்தால் கூட அதை மறுத்துவிட்டு தாம் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் வேலை கிடைத்தால் தமக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றனர். இப்படியான எண்ணம் கொண்டவர்கள் சம்பளம் மற்றும் தமது நலன்களை மட்டும் எதிர்பார்த்து ஆசிரியர் தொழிலை தேர்வு செய்ய நினைப்பதை கைவிட்டு அந்த வாய்ப்புக்களை ஆசிரியர் தொழிலே வேண்டும் என்று அத்துறையின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.

பலரும் தமக்கு வேலை கிடைக்கவே இல்லை என்று மன வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில், அரச வேலையும் வேண்டும், அது சிரமமற்ற முறையிலும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் சிறிதேனும் தமது சுயநலச் சிந்தனையில் இருந்து மீள வேண்டியது அவசியமானதே.

02.04.2019
#பிரகாஸ்