Breaking News

ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியூதீன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யுமாறு வலியுறுத்தும் பொதுபல சேனா!


தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தினர் உட்பட சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அமைப்புக்கள் என அடையாளப்படுத்தப்படும் பொதுபல சேனா உள்ளிட்ட சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யுமாறும் பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தொடர் தற்கொலைத் தாக்குதல்களை முற்கொண்ட ஐ.எஸ் அமைப்பினருக்குப் பின்னால் முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை கடும்போக்குவாத அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றன.

வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி ஆகியோர் மீதே இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனினும் தாக்குதல்களை நடத்திய ஆயுததாரிகளுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பதை குற்றச்சாட்டை எதிர்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் செயலகத்திற்கு விஜயம் செய்திருந்த மாகல்கந்தே சுதத்த தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பினரும், அந்த அமைப்பிற்கு ஆதரவான சிங்களே உள்ளிட்ட கடும்போக்குவாத சிங்கள பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளை உடன் பதவிகளில் இருந்து நீக்கி அவர்கள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.

மாகல்கந்தே சுதத்த தேரர், பொதுபல சேனா அமைப்பு- ‘விசேடமாக இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை கையளித்தோம். நாட்டில் ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு அமைச்சர்கள் சிலரும், ஆளுநர்கள் இருவருடைய பெயர்களுடன் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டு வருகின்றன. குறித்த நபர்கள் தொடர்ந்தும் அந்த பதவியில் இருப்பதால் இதுகுறித்த சுயாதீன விசாரணை இடம்பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோரை உடன் பதவியிலிருந்து நீக்கி விசாரணை செய்யும்படி ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளோம். தீவிரவாதிகளுடன் மறைமுகமான தொடர்பினை வைத்திருப்பவர்களும் தீவிரவாதிகளே என்று பெயரிட முடியும் என்பதோடு கைது செய்யவும் முடியும். தேசிய தவ்ஹீத் ஜமாத் மீதும், புர்கா மற்றும் நிகாவ் போன்றன தடை செய்யப்பட்டாலும் திருப்திகொள்ள முடியாது. அவசர காலச்சட்டம் நீங்கிய பின்னர் அவை மீளச் செயற்பட ஆரம்பிக்கும். ஆகவே நாடாளுமன்றத்தில் சட்டத்தின் ஊடாக அவற்றை தடைசெய்ய வேண்டும்” எனவும் மேலும் தெரிவித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.