நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, April 12, 2019

ஜனாதிபதி கொலைச்சதி முயற்சி விவகாரமா?: இரவோடு இரவாக ‘தூக்கப்பட்ட’ கருணா, பிள்ளையான் குழு உறுப்பினர்கள்!

Friday, April 12, 2019
Tagsகடந்த ஒரு வாரத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் துணைப்படை உறுப்பினர்களான நான்கு தமிழ் இளைஞர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் குழு), கருணா குழுவை சேர்ந்த நால்வரே கைதாகியுள்ளனர். இந்த தகவலை சி.ஐ.டி இன்னும் பகிரங்கப்படுத்தா விட்டாலும், விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வவுணதீவில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பிள்ளையான் குழுவினர் சிலரும் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கருணா குழுவில் இணைந்து செயற்பட்ட மகிழன், மற்றும் வீரா ஆகியோர் கைதானவர்களில் அடங்குகிறார்கள் என தெரிகிறது. கைதான ஏனைய இருவரின் அடையாளங்கள் வெளிப்படவில்லை.
 
ஜனாதிபதி கொலை சதி முயற்சியை மட்டக்களப்பில் வைத்து அரங்கேற்றவே திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த விவகாரத்தில் கைது நடந்ததா, அல்லது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதானார்களா, அல்லது வவுணதீவு விவகாரத்தில் கைதானார்களா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், மட்டக்களப்பில் செயற்படும் துணைப்படை உறுப்பினர்களிற்கு கடந்த மாத கொடுப்பனவை வழங்கியபோது, சிறிய வாய்த்தர்க்கம் தோன்றியதாகவும் தெரிய வருகிறது. மட்டக்களப்பில் சுமார் 130 இற்கும் அதிகமான கருணா, பிள்ளையான் அணியினர் தற்போதும் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து மாதாந்த கொடுப்பனவாக 40,000 ரூபா பெற்று வருகிறார்கள். இத்தனை பேருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கியும், முக்கிய இரண்டு கொலையில் சூத்திரதாரியை அடையாளம் காண முடியவில்லையென இராணுவத்தரப்பு அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து, வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.