நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 25, 2019

உயிரிழந்ததாக கூறப்பட்டவர் நீதிமன்றில் தோன்றினார்: யாழில் சுவாரஸ்ய சம்பவம்!


வழக்கின் எதிரியொருவர் உயிரிழந்து விட்டார் என்று பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் தோன்றிய சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (25) இந்த சம்பவம் நடந்தது.

பொலிசாரின் தவறான அறிக்கை காரணமாகவே இந்த குழப்பம் நேர்ந்தது தெரியவர, பொலிசார் எச்சரிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இரண்டாவது எதிரி வழக்குத் தவணைகளுக்கு மன்றுக்கு சமுகமளிக்காதததால் அவருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த மாதம் அரியாலையில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்டனர். அதன்போது சிறப்பு அதிரடிப்படையினரைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரில் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கின் முதலாவது எதிரியும் ஒருவராவார். அதனால் அவர் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அதன்போது முதலாவது எதிரி இறந்துவிட்டார் என்றும் அவரது இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதாகவும், அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை நீக்கம் செய்யுமாறும் பொலிஸார் மன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில் கடந்த தவணை வழக்கு விசாரணைக்கு சமூகமளித்திராத முதலாம் எதிரி, சட்டத்தரணி வி.கௌதமன் ஊடாக நேற்று நீதிமன்றில் சரணடைந்தார்.

இறந்து விட்டவர், மன்றில் தோன்றியதால் குழப்பம் ஏற்பட்டது.

“நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்று பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்களே?“ என்று சந்தேகநபரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

“முதலாவது எதிரி இறக்கவில்லை. சிறப்பு அதிரடிப் படையினரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நீண்டநாள்களாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்“ என்று சட்டத்தரணி மன்றுரைத்தார்.

“வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது எதிரி நீங்கள்தானா, உங்கள் தேசிய அடையாள அட்டையை காண்பியுங்கள்“ என்று மன்று அறிவுறுத்தியது.

எதிரி தேசிய அடையாள அட்டையை சட்டத்தரணி ஊடாக மன்றில் சமர்ப்பித்தார். எனினும் அடையாள அட்டையில் படமோ அல்லது பெயர் விவரங்களோ தெளிவாக இல்லை. அதனால் இதனை வைத்து எவ்வாறு உங்களை உறுதி செய்கிறீர்கள் என்று எதிரியிடம் மன்று கேள்வி எழுப்பியது.

அத்துடன், எதிரி உயிருடன் மன்றில் முன்னிலையாகி உள்ள நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் எவ்வாறு மன்றுக்கு அறிக்கையிட முடியும் என்று பொலிஸாரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

பொலிசாருக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

எதிரியின் பெயர் மற்றும் விவரங்களுடன் நீதிவான் வழக்கு ஏட்டை பொறுமையாக ஆராய்தார். அதன்போது இரண்டாவது எதிரியே வழக்குத் தவணைகளுக்கு மன்றில் முன்னிலையாகவில்லை, அவருக்கே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தார்.

அதனை நீதிவான் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார். பொலிஸாரும் தமது பதிவுப் புத்தகங்களை ஆராய்ந்த போது இரண்டாவது எதிரியே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.

இதனால் பொலிஸாரைக் கண்டித்த மன்று முதலாவது எதிரியை எச்சரித்து பிடியாணை உத்தரவை மீளப்பெற்று விடுவித்தது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!