நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 10, 2019

களை கட்ட ஆரம்பிக்கிறது முள்ளிவாய்க்கால் குழப்பம்: நான்காவது குழுவும் ‘கோதா’வில் குதித்தது!

Wednesday, April 10, 2019
Tagsமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் ஆரம்பிக்கவுள்ள நிலையில், தமிழ் தரப்பிற்குள் வழக்கம் போல “குடுமிப்பிடி“ சண்டை ஆரம்பித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே திரைமறைவில் நடந்து கொண்டிருந்த குடுமிப்பிடி சண்டை இன்றுடன் மேடைக்கு வர ஆரம்பித்துள்ளது.

வடக்கில் சுமார் மூன்றிற்கு குறையாத குழுக்கள் முளளிவாய்க்காலை கைப்பற்ற முயன்று கொண்டிருக்கும் நிலையில், இன்று நான்காவது குழுவும், முள்ளிவாய்க்கால் கோதாவில் குதித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இறந்துபோனவர்களின் உறவுகள், சமய தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதாக இந்த குழுவை அமைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

கடந்தமுறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்திய புலம்பெயர் அமைப்புக்கள் இம்முறையும் குழப்பத்தை ஏற்படுத்த கூலிப்படைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரித்தானியாவில் வசிக்கும் சில நபர்கள், யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை கடந்தமுறை கூலிப்படையாக பாவித்தார்கள் என்ற தகவலை அப்பொழுதே தமிழ்பக்கம் அம்பலப்படுத்தியிருந்தது.

இம்முறையும் அதே புலம்பெயர் நபர்கள், பல்கலைகழக மாணவர்களிற்கு கட்டளை அனுப்பியுள்ளனர். தமிழ் மக்கள் பேரவை, மன்னாரிலுள்ள சிவகரன், மற்றும் குறிப்பிட்ட இரண்டொரு சிவில் அமைப்புக்களை இணைத்து, நினைவேந்தல் குழுவை அமைத்து, உடனடியாக காரியத்தை தொடங்குமாறும், அவர்கள் தாமதித்தால் வேறு ஆட்கள் மூலமாக, அந்த விடயத்தை செய்வதாக எச்சரிக்கை தொனியில் கட்டளையிட்டிருந்தனர். அது தொடர்பான குறுந்தகவல் பரிமாற்றங்கள் சிலவற்றையும் தமிழபக்கம் பெற்றுள்ளது. தேவையேற்படின் வெளியிடவும் தயாராக உள்ளது.

இதேபோல, பொது அமைப்புக்கள் சிலவும் நினைவேந்தலை ஒழுங்கமைக்க முயற்சித்தன.

அதேபோல, முன்னாள் போராளி பசீர் காக்காவின் ஏற்பாட்டில் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய முயற்சியும் நடக்கிறது.

சுமார் இரண்டு வாரங்களின் முன்னர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடு தொடர்பாக பிரதேச மக்களுடன் பேச, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் சென்றிருந்தார். எனினும், பிரதேசமக்கள் அவரை அங்கு நுழைய அனுமதிக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் பொது நினைவுச்சின்னமாகியுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பிரதேசமக்களின் ஒரு பகுதியினரை, கடந்தமுறை பல்கலைகழக மாணவர்கள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தய புலம்பெயர் நபர்களே வளைத்துப் போட்டு, குழப்பத்தை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தநிலையில் திடுதிப் என இன்று ஒரு குழு முள்ளிவாய்க்காலில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, பந்தயத்தில் தாமும் இருக்கிறோம் என அறிவித்துள்ளனர்.

அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில்-

எமது இனம் துடிக்கதுடிக்க அழிக்கப்பட்ட இந்த தசாப்தத்தின் நிறைவை எந்தவித அரசியல் தலையீடுகளும், முனைப்புக்களும், மேடைப் பேச்சுக்களும் இன்றி அமைதியான சூழலில் எம் உறவுகளை நினைத்து, அவர்கள் இறுதியாக வாழ்ந்து மரணிக்க செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று வேற்றுமைகளைக் கடந்து நாம் கண்ணீர் விட்டு அழ, எங்கள் இதயத்தின் ஆறாத காயங்களை சிறிது கழுவிக்கொள்ள இதனுடைய சர்வதேசத்திற்கும் இந்த இன அழிப்பு தொடர்பான உண்மையை உணர்த்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இறந்து போன உறவுகளின் உறவுகள், சமயத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவை அமைத்து உள்ளோம்.

எந்த கட்சி பின்னணியும் அற்ற, குறுகிய நோக்கங்களை கடந்த இந்த அமைப்புடன் இணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலை செவ்வனவே நடத்தி முடிக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைக்கிறோம்.

மேலும் இந்த நினைவேந்தல் தொடர்பாக பல்வேறு தளங்களிலும் நிதி சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கவும், அறிந்து கொள்ளவும் முடிகிறது. இந்த நிகழ்வு தொடர்பான நடவடிக்கைகளை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் குழுவே மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்“ என குறிப்பிட்டுள்ளது.