நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 1, 2019

நிலைமாறுகால நீதி வேண்டாமென்பது அரசுக்கு வாய்ப்பாகிவிடும்… காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளுங்கள்: எம்.ஏ.சுமந்திரன்!

Monday, April 01, 2019
Tagsகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிராந்தியக்கிளையை மன்னாரில் அமைக்க முடிவாகியிருந்தது. ஆனால் இன்னும் அமைகக்கப்படவில்லை. அந்த அலுவலகத்தை அமைத்தால் தீக்குளிக்கப் போவதாக தாய்மார் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதுதான் எமக்குள்ள பெரிய சவால். நிலைமாறுகால நீதியில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், எமது சமூகத்திற்குள்ளேயே எழுந்துள்ள விரக்தி, கோபம், காத்திருப்பால் எழுந்த குரல்கள் என்பதும் எமக்கு தெரியும் என தெரிவிதுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சான்றிதழை, உறவுகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சான்றிதழை பெறுவதுதான் அரசை பொறுப்புக்கூற வைக்கும் என்றும் தெரிவித்தார்.

விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தால், யாழ்ப்பாணத்தில் நேற்று (31) நிலைமாறுகால நீதியில் எங்கள் குரல் என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
 
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிராந்தியக்கிளை மன்னாரில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை அந்த அலுவலகம் ஏன் திறக்கப்படவில்லை?. அந்த அலுவலக மன்னாரில் திறக்கப்பட்டால் தீக்குளிப்போம் என்று தாய்மார் சிலர் எச்சரித்தனர்.

இதுதான் தற்போது எமக்குள்ள சவால். நிலைமாறுகால நீதி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த அரசுக்கு மனமில்லை. பல்வேறு அழுத்தங்கள் காரணமாக சிலவற்றை ஆமை வேகத்தில் செயற்படுத்துகின்றது. அந்த வேகம் போதாது என்பதன் காரணமாக, நம்பிக்கையை இழப்பவர்கள் இப்போது அதை வேண்டாம் என்று கூறுவதும் எங்களுக்கு இருக்கக்கூடிய மற்றைய சவால்.

நிலைமாறுகால நீநீதியிலே இந்த இரண்டு சவால்களும் எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. இந்த முறை ஜெனிவாவில் சில தமிழ் தரப்புகள் நிலைமாறுகால நீதியே வேண்டாம் என்றும் கூறுகின்றார்கள்.வேண்டாம் என்றால்  அரசுக்கு நல்ல சாட்டாக போய்விடும். இழுத்தடித்து இழுத்தடித்து இவற்றையெல்லாம் செய்கின்ற போது, யாருக்காக இது செய்யப்படுகிறதோ அவர்களே வேண்டாம் என்று கூறிவிட்டால் அது அரசுக்கு நல்ல சாட்டாக போய்விடும். வேண்டாம் என்று கூறுபவர்களை எந்த விதத்திலும் நான் குறைவாக பேசவில்லை. ஆனால் இது ஒரு சவால்.
 
எங்களுடைய பிள்ளைகளை சில மணிநேரம் காணவில்லை என்றால் என்ன செய்கிறோம். பத்து வருடங்களாக புபிள்ளைகளை தேடும் தாய்மார்கள் என்ன செய்வார்கள் என்பதும், அந்த வலி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

உலகிலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்ட நாடுகளில் இப்படியான காலதாமதம் இருந்திருக்கிறது. பதில் கிடைத்ததாக இல்லை. ஆனாலும் உண்மை கண்டறியப்பட வேண்டும். விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

அரசால் வழங்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழை உறவுகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கான சான்று. காணாமல் ஆக்கபட்டுள்ளார் என்று அரசுசே சான்றிதழ் தரும் போது, என்ன நடந்தது என்பதையும் அரசே கூற வேண்டும். அரசியல் இலாபங்களுக்காக அதை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறுபவர்களின் பேச்சைக் கேளாது சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள்.

மன்னர் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டின் பாகத்தை சர்வதேச பரிசோதனைகளில் முதல் நிலையில் உள்ள புளோரிடா என்ற இடத்திற்கு அனுப்பினார்கள். எமக்கு கிடைத்திருக்கும் முடிவு, அது பழமை வாய்ந்தது என்பதே. நாங்கள் பரிசோதனைக்கு பிஸ்கட் பாக்கெட்டை அனுப்பவில்லை. அந்த பரிசோதனையின் முடிவு உண்மையானது அல்ல என்றால், நாங்கள் இன்னொரு பரிசோதனைக்கும் கேட்டிருக்கிறோம். திலும் இவ்வாறான ஒரு முடிவு வந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உண்மை எப்போதும் கசக்கும். நாங்கள் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்பதற்காக அது உண்மை இல்லை என்றாகிவிடாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயத்தில் சர்வதேச விசாரணையை நாங்கள் கோருவதும் அதற்குத்தான். முழுக்க முழுக்க சர்வதேச விசாரணை இருந்தால் அது சிறந்த ஒரு விசாரணையாக இருக்கும். அப்போது குற்றமிழைத்த யாரும் தப்பிக்க முடியாது. இராணுவத்தினர் குற்றமிழைத்த அதேவேளை, முற்பட்ட காலங்களில் என்ன நடந்தது என்பதும் எங்களுக்குத் தெரியும். யார் யாரெல்லாம் குற்றமிழைத்தார்களோ அவர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்“ என்றார்