நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 3, 2019

வடக்கு, கிழக்கில் சில நூறு ஏக்கர் காணிதான் விடுவிக்கப்படவில்லை; ஜனாதிபதி முன் ‘அவிழ்த்து’ விட்ட இராணுவம்: கூட்டமைப்புடன் மோதல்!

Wednesday, April 03, 2019
Tagsவடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் இன்று மாலை நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கை சேர்த்த தமிழ் எம்.பிக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், வடக்கு, கிழக்கு ஆளுனர்கள், பாதுகாப்புத்துறை பிரதானிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 6 கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்களே இன்றும் பேசப்பட்டது. எனினும், தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

வலி வடக்கு காங்கேசன்துறையில் 232 ஏக்கர் காணி அளவீடு செய்யப்படவுள்ளதையும், மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அளவீடு செய்யப்படவுள்ளதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, கடற்படையினர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

காங்கேசன்துறையில் அளவீடு செய்யப்படவுள்ள காணியில் முன்னர் பிரமாண்ட கடற்படை தளம் அமைந்திருந்ததாகவும், அந்த காணியையே அளவீடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் கடுமையான ஆட்சேபணை தெரிவித்தனர்.

இதன்போது அமைச்சர் ராஜித சேனரத்னவும் ஆதரவாக குரல் கொடுத்தார். தான் பலமுறை காங்கேசன்துறைக்கு சென்று வந்ததாகவும், அங்கு கடற்படை முகாம் இருக்கவில்லையென்றும் தெரிவித்தார். எனினும், அங்கு கடற்படை முகாம் இருந்ததாக கடற்படையினர் விடாப்பிடியாக நின்றனர்.

இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும், பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் கடுமையான- சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இராணுவத்தின் காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களை கையாளும் அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன, வடக்கு கிழக்கில் 24,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டது, இன்னும் ஒரு சில நூறு ஏக்கர்களே விடுவிக்க வேண்டியுள்ளதாக விளக்கமளித்தார்.

உடனே இடைமறித்த சிறிதரன் எம்.பி, “24,000 ஏக்கர் விடுவிக்கப்பட்டதென்றால், எங்கெங்கு விடுவிக்கப்பட்டதென கூறுங்கள். நாங்களும் பல வருடங்களாக இந்த விபரத்தை கோருகிறோம். நீங்கள் தர மறுக்கிறீர்கள்“ என கேட்டார்.

எனினும், 24,000 ஏக்கர் விடுவித்ததாக திரும்ப திரும்ப கூறினாரே தவிர, எங்கெங்கு விடுவிக்கப்பட்டதாக கடைசிவரை கூறவில்லை.

கிழக்கில் விடுவிக்க வேண்டிய காணிகள், வடக்கில் விடுவிக்க வேண்டிய காணிகள் பற்றி எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, பாதுகாப்பு தரப்பிற்கும், த.தே.கூ எம்.பிகளிற்குமிடையில் விவாதம் கடுமையாக நடக்க, ஜனாதிபதி சூடாகி விட்டார். “நாடாளுமன்றத்தை போல இங்கு விவாதம் நடத்திக் கொண்டிருந்தீர்கள் என்றால் ஒரு முடிவும் எடுக்க முடியாது. இது முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை. அங்கு (களத்தில்) நின்று பேசினால்தான் ஏதாவது முடிவெடுக்கலாம். இந்த பிரச்சனைகள் (காங்கேசன்துறை, மானிப்பாய்) மற்றும் காணிகள் விடுவிப்பு தொடர்பாக வடக்கு ஆளுனர், இராணுவ அதிகாரிகள், அந்த பகுதி கூட்டமைப்பு எம்.பிகள் கூடி பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்“ என்றார்.

அம்பாறைய காணிகள் தொடர்பாக கோடீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்ட, கிழக்கு ஆளுனருடன் பேசி முடிவெடுக்க பணித்தார் மைத்திரி.

ஆளுனருடன் பேசி முடிவெடுக்கும்வரை, இந்த காணிகள் அளவீட்டை நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் எம்.பிக்கள் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தினர். எனினும், ஜனாதிபதி அதில் விருப்பம் காட்டவில்லை. இறுதியில் தொடர் வற்புறுத்தலையடுத்து, இறுதி முடிவெடுக்கும்வரை அளவீட்டை நிறுத்த அரைகுறை மனதுடன் சம்மதித்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பற்றி பேசப்பட்டது. தற்போது உள்ள பணமான 2,100 மில்லியனில் சிறிய விமானங்கள் இறங்கும் விதமாக அபிவிருத்தி செய்வதென்றும், பின்னர் இந்திய உதவி கிடைக்கும்போது, பெரிய விமானங்கள் தரையிறங்க ஓடுபாதை அமைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி திட்டம் பற்றி பேசப்பட்டது. துறைமுக வேலை நடத்தாலும், அந்த பகுதியில் மீள்குடியேற்றம் நடக்கவில்லையென கூட்டமைப்பு குறிப்பிட்டது. ஆனால், அந்த பகுதியில் மக்களை அனுமதித்ததாக இராணுவம் சொன்னது. மீளவும் சர்ச்சையாகி, ஜனாதிபதி தலையிட்டு, யாழ்ப்பாணத்திலேயே பேசி முடிவெடுங்கள் என்றார்.

பாதுகாப்பு அத்தியாவசியமுள்ள சில காணிகள்தான் விடுவிக்கப்படவில்லையென இராணுவம் குறிப்பிட்டபோது, பாதுகாப்பு அத்தியாவசியமுள்ள காணிகளை விடுவிக்க முடியாதென மைத்திரியும் ஆமோதித்திருந்தார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் 7வது கூட்டம் இது. முதல் 6 கூட்டங்களிலும் இதேவிடயங்கள்தான் பேசப்பட்டது. எனினும், அவை பெரிய முன்னேற்றத்தை எட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.