நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

கோட்டாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் வித்தித்துள்ள காலக்கெடு!

Wednesday, April 17, 2019
Tags


படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதிலளிப்பதற்கான காலக்கெடு அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமான பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ச பதிலளிக்க எதிர்வரும் 29ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு கொழும்பு இரத்மலானையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அகிம்சா விக்ரமதுங்க தனது தந்தையின் படுகொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்றும் அதற்கான நட்டஈட்டைப் பெற்றுத்தருமாறு கோரியும் கடந்த 7ஆம் திகதி கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய, தனது தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றிருந்த நிலையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட நோட்டீஸ் கோட்டாபய ராஜபக்சவிடம் அமெரிக்காவில் வைத்து கையளிக்கப்பட்டும் இருந்தது.

அதேபோன்று கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த கடந்த 2007ஆம் ஆண்டில் சி.ஐ.டியின் கீழ் செயற்பட்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட ஈழத்தமிழரான கனேடியப் பிரஜை ரோய் சமாதானம் என்பவரும் அமெரிக்காவில் கோட்டாபயவுக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியிருந்தார்.

எவ்வாறாயினும் ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பிலான வழக்கு கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டு சம்பந்தமாக பதிலளிக்க எதிர்வரும் 29ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அல்லது வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு மனுவொன்றைத் தாக்கல் செய்யவோ பிரதிவாதி தரப்புக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பிரஜையான கோட்டாபய ராஜபக்ச பதிலளிக்கவில்லை என்றால், பிரதிவாதியின்றியே வழக்கை விசாரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, தனக்கெதிராக அமெரிக்காவில் தொடர்ந்திருக்கும் வழக்குகளை விசாரணையின்றி தள்ளுபடி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அங்குள்ள தனது சட்டத்தரணிகள் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்துவரும் சோஷலிச மக்கள் முன்னணித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேரில் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று கூறிவந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்றைய தினம் அவரை சந்தித்து பேச்சு நடத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.