onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Sunday, April 28, 2019

தீவிரவாதம் எது, விடுதலைப் போராட்டம் எதுவென்பது இப்போது புரிந்திருக்கும்!

  admin       Sunday, April 28, 2019


வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் யாழில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

அங்கு அவர் தெரிவித்ததாவது..

இலங்கையில் நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில், இத்தகைய தாக்குதல்கள் நடாத்தப்படவுள்ளதாக அரசிற்கு பல தரப்பாலும் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தவறியுள்ளது. ஆகவே இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே எடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலையிலையே தற்போது அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் இராணுவத்தைப் பயன்படுத்தி சோதனை தேடுதல் என மேற்கொள்வதால் பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை நீக்க வேண்டியது அவசியம். அதற்கமைய பொலிஸாரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தை தவிர்த்து பொலிஸாரைப் பயன்படுத்துமாறு நாங்கள் கோருகின்ற போது வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்துமாறு நான் கூறியதாக சில செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அத்தகைய செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை. இராணுவத்தை நிலை நிறுத்துமாறோ அல்லது இராணுவத்தை பயன்படுத்துமோறோ நாங்கள் கோரவில்லை என்பதை தெளிவாக கூறுகின்றோம்.

மேலும் குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நஸ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போன்றே கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு வாழ்கின்ற போது அத்தகைய நஸ்ட ஈடுகள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையே இருக்கின்றது.

இதே போல பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச உதவியுடன் தமக்கான நீதியைக் கோருகின்ற சந்தர்ப்பங்களில் அவ்வாறு சர்வதேச உதவிகள் பெறப்படவோ சர்வதேச விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படவோ மாட்டாது என இலங்கை அரச தரப்பினர் தொடர்ந்தும் தெரிவித்து வந்தனர். அது மாத்திரமல்லாமல் சர்வதேச தரப்புக்கள் இங்கு வருவது இலங்கையின் இறைமையைப் பாதிக்குமென்றும் கூறி வந்தனர்.

ஆனால் இன்றைக்கு சர்வதேசம் வந்து விசாரணைகளைச் செய்கின்றது. அந்தச் சர்வதேசத்தையே கைகூப்பி வரவேற்பவர்களாக இலங்கை அரச தரப்பினர்கள் இருக்கின்றனர். ஆகையினால் இப்போது இலங்கையின் இறைமை பாதிக்கவில்லையா என்று கேட்கின்றது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அநீதிகளுக்கு சர்வதேச உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டுமெனக் கோருகின்றோம்.

அத்தோடு இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இனங்கள் அல்லது மதங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றோம். ஏனெனில் வவுனியாவில் உள்ள கூட்டுறவு கல்லூரியை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படைத்தரப்பு அதனை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்த போதிலும் தற்போது அதனை விடுவிக்க போவதில்லை எனக் கூறியிருப்பதாக அறிகிறோம்.
 
அதற்கான காரணமாக பாகிஸ்தானில் இருந்த இலங்கைக்கு வந்துள்ள முஸ்லிம் மக்களை அந்தக் கல்லூரி வளாகத்தில் குடியேற்றப் போவதாக தெரிய வருகின்றது. ஆனால் நாங்கள் அவர்களை குடியேற்ற வேண்டாம் என்று கூறவில்லை. அந்தக் கல்லூரியை விடுவித்துவிட்டு இங்கு குடியேற்றாது வேறு எங்காவது கொண்டு சென்று குடியேற்றுங்கள் என்று தான் கூறுகின்றொம்.

இங்கு ஏற்கனவே பல முரண்பாடுகள் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கமே மேற்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றோம். மேலும் அதிருப்தியுடனும் அச்சத்துடனும் வாழ்கின்ற மக்களுக்கு முழுமையான பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குண்டுத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் அதன் உண்மையை மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

இதே வேளை நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் ஈழத்தமிழரின் இன விடுதலைக் போராட்டம் என்றால் என்ன என்பதும் தீவிரவாதம் என்றால் என்ன என்பதையும் நாட்டு மக்களும் அரசும் சர்வதேசமும் உணர்ந்திருக்கின்றன. இதனூடாக எமது இனவிடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொள்ள நிலை வந்துள்ளது. ஆகவே எமது இனவிடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அரசும் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளுமென எதிர்பார்க்கின்றொம்.

குறிப்பாக இலங்கையில் எங்கு ஒரு சம்பவம் இடம்பெற்றாலும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முன்னதாகவே அது புலி புலி என்று பார்க்கின்றதும் கூறுகின்றதுமான நிலைமையே இருந்து வந்தது. அதனடிப்படையிலையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்ட பின்னர் சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதுடன் பலரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் இன்றைக்கு அதனை யார் செய்தார்கள் என்ற உண்மை வெளிவந்திருக்கின்றது. ஆக முன்னாள் போராளிகளை சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற வழமையான செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு குற்றஞ்சாட்டுவதையும் தவிர்க்க வேண்டும். ஏதாவது ஒரு சம்பவம் நடைபெற்றால் அவை தொடர்பில் நீதியான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.

அரசின் கண்மூடித்தனமான இத்தகைய செயற்பாடுகளால் இன்றும் எத்தனையோ பேர் சிறைகளில் வாடுகின்றனர். ஆகவே கண்மூடித்தனமான செயற்பாட்டுகளைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

logoblog

Thanks for reading தீவிரவாதம் எது, விடுதலைப் போராட்டம் எதுவென்பது இப்போது புரிந்திருக்கும்!

Previous
« Prev Post