நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 30, 2019

சர்வதேச விசாரணையின் ஊடாகவே தவறிழைத்தவர்கள் தொடர்பான உண்மை வெளிவரும் – சுமந்திரன்

Saturday, March 30, 2019
Tags


இறுதி யுத்தத்தின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளதாக குற்றச்சாட்டப்படும் காரணத்தினாலே, உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும், இந்த விடயத்தில் உண்மை நிலவரம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ள நிலையில், ஏன் ஒரு தரப்பினர் மீது மட்டும் குற்றம் சுமத்த வேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

அது சரியானது, நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு அறிக்கையில், இராணுவத்துக்கு எதிராக 5 குற்றங்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 6 குற்றங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதாவது, சர்வதேச போர் விதிகளை மீறியதாகவே இந்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் விடுதலைப் புலிகளின் ஒரு சில தலைவர்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனாலேயே, நாம் உண்மை அறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.  இதன் ஊடாக உண்மை வெளிவந்தால் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரும், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்வொன்றை மேற்கொள்ள முடியும்.

இந்த குற்றச்சாட்டானது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானது என தமிழர்கள், நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது அப்படியானதல்ல.

உண்மை வெளிவந்தால் மட்டுமே யார் குற்றவாளிகள் என்பதை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும். இதனை நாம் வடக்கிலும் தெரிவித்துள்ளோம்.

யுத்த காலத்தின்போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை உண்மையான ஒரு விடயமே. இறுதி யுத்த காலத்தின்போது, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து இதுவரை எந்தவொரு விசாரணைகளும் இடம்பெறவில்லை. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மட்டும்தான் தற்போது விசாரணைகள் நடக்கின்றன.

குறித்த 11 பேரும் விடுதலை புலி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால்தான் இந்த விசாரணை நடக்கிறது என சிலர் தெரிவிக்கின்றனர்.

அப்படியென்றால், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடயத்திற்கு தீர்வென்ன? இதற்காகத் தான் நாம் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.