நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, March 30, 2019

போற வழியில ஆட்டோக்கார தம்பியிடம் கேட்டேன். "தம்பி நல்ல சாப்பாட்டுக்கடை ஒண்டு சொல்லடாப்பா?"

Saturday, March 30, 2019
Tagsஊருக்கு போனபோது கிளிநொச்சிக்கு ஒரு அலுவலாக நானும் மனிசியும் என்ர பொடியனும் போயிருந்தோம்.

போற வழியில ஆட்டோக்கார தம்பியிடம் கேட்டேன்.
"தம்பி நல்ல சாப்பாட்டுக்கடை ஒண்டு சொல்லடாப்பா?"

அவன் யோசிக்காமல் டக்கெண்டு ஒரு கடையின் பேரைச்சொன்னான்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு போட்டு  ஒரு சந்தேகத்தில் கோயிலுக்கு பக்கத்தில இருந்த கடை ஒண்டில மீண்டும் அதே கேள்வியைக்கேட்டேன்.

ஆட்டோக்கார தம்பியில் நம்பிக்கை இல்லாமல் கேட்டகவில்லை.
எப்போதும் ஒரு விடயத்தை இரண்டுமுறை உறுதிப்படுத்திக்கொள்வது என் பழக்கம்.

அந்த கடைக்கார அண்ணையும் அதே சாப்பாட்டுக்கடையின் பெயரையே சொன்னார்.

அலுவலுகள் எல்லாம் முடிச்சு அந்த சாப்பாட்டுக்கடைக்குப்போனோம்.

கிளிநொச்சியில் மிகவும் அழகான முறையில் மிகவும் நேர்த்தியாக கலையம்சத்துடன் ஒரு சாப்பாட்டுக்கடை.

எங்கட பாரம்பரியச்சமையலுடன் இன்முக வரவேற்பு. கடையை மிகவும் தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.
உணவுகள் எல்லாம் கண்ணாடிப்பெட்டிக்குள் மிகவும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.

என்ர பொடியன் கொஞ்சம் குழப்படி அதோட துறு துறுவெண்டு இருப்பான். அங்க வேலை செய்யும் பொடியள்  இரண்டு பேர் ஓடிவந்து தூக்கி வைச்சு விளையாடினார்கள்.

Counter இல் நிண்ட பொடியன் சிரித்தமுகத்தோடு என்னை நலம் விசாரித்தான். என்ர பொடியனை தூக்கி வைச்சு கொஞ்சி விளையாடினான்.

மனமும் வயிறும் நிறைய சாப்பிட்டம்.

சாப்பிட்டு முடிய காசைக்கொடுத்துவிட்டு நன்றி சொல்லிவிட்டு வாசலில் பருத்தித்துறை போற பஸ்ஸுக்குக்காக காத்திருந்தோம்.

A9 ஆல அடிக்கடி எப்பிடியும் பஸ் வரும்.

"அண்ணை நீங்கள் நிண்டு மறியுங்கோ. வெய்யிலா இருக்கு மற்றாக்கள் கடை வாசலில் உள்ள நிழல்க்குடைக்குள்ள நில்லுங்கோ" எண்டு அங்க வேலை செய்யும் பொடியன் அன்போடு  சொன்னான்.

நான் பஸ்ஸுக்காக A9 றோட்டில காவல் நிற்கும் போது கடையில வேலை செய்யுற பொடியன் ஓடி வந்தான்.

"அண்ணை ஒருக்கா வாங்கோ. சின்ன பிழை நடந்து போட்டுது" என்று சொன்னான்.

நான் உள்ளே போனேன். 

Counter இல் நிண்ட தம்பி எழும்பி என்னிடம் மன்னிப்பு கேட்டான்.

" அண்ணா மன்னிச்சு கொள்ளுங்கோ. தவறுதலாக 540 ரூபா கூடுதலாக எடுத்திட்டம். இந்தாங்கோ காசு"

நான் சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்டேன்.

பொதுவாக யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக்கடைகளில் அதுவும் எங்கட தமிழ் ஆக்களின் கடைகளில் வேண்டா வெறுப்பாகவே வாடிக்கையாளர்களை கவனிப்பார்கள்.

உடுப்புக்கடையாக இருந்தால் என்ன? சாப்பாட்டுக்கடையாக இருந்தால் என்ன?
" வேணுமெண்டால் வாங்கு இல்லாட்டால் இடத்தைவிட்டு மாறு" என்ற மனப்பாங்கோடுதான் (attitude )  யாவாரம் செய்கிறார்கள்.

ஆனால் கிளிநொச்சியில் இந்த சாப்பாட்டுக்கடையில் என் அனுபவம் மிகவும் நல்லதாகவே இருந்தது. 

பொதுவாக என்னிடம் இருந்து " நல்லது" என்ற சான்றிதழ்(certificate) வாங்குவது மிகக்கடினம்.

அந்த சாப்பாட்டுக்கடைக்கு மதிப்பெண் குடுக்கச்சொன்னால் 10 இக்கு 9 கொடுப்பேன்.

இத்தனைக்கும் எனக்கும் அந்த சாப்பாட்டுக்கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் சொந்தக்காரர் ஆர் எண்டும் தெரியாது. ஆனால் கிளிநொச்சியில் ஒரு சாப்பாட்டுக்கடையை திறந்து அதை மிகவும் நேர்த்தியோடு வெற்றிகரமாக செய்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன்.

இந்த முயற்சிக்குபின்னால் பல தடைகளையும் பிரச்சினைகளையும் தாண்டித்தான் வந்திருப்பார் அந்தக்கடையின் சொந்தக்காரர்.

தமிழில பேர் வைச்சால் யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்கள ஆக்கள் வரமாட்டினம் எண்டு ஆங்கிலத்தில் பெயர்களை வைச்சு வியாபாரம் செய்யும் எங்கட ஆக்களின் மத்தியில்;

" பாரதி உணவகம்" என்ற பெயரோடு சாப்பாட்டுக்கடையை நடாத்தும் அந்த பொடியனின் தொழில்முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். பலருக்கு அங்கு வேலைவாய்ப்பு. அத்தனைபேரும் எங்கட பொடியள்.

அந்த உணவகத்தில் தான் போன கிழமை கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்கு சாப்பாடு ஓடர் குடுத்து எடுக்கப்பட்டது.
அந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரும் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் சாப்பிட்ட சாப்பாட்டில் கத்தரிக்காய்க்கறிக்குள் "புழு" ஒண்டு கிடந்ததும்;
அதை கண்ட ஆளுநர் வெகுண்டெழுந்து கடையை இழுத்து மூடச்சொல்லி உத்தரவிட்டு அதை செய்துபோட்டு போனாராம்.

அவரின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்த சுகாதார பரிசோதகரின் கடமை உணர்ச்சியை பாராட்டுவதா? அல்லது வெகுண்டெழுந்த ஆளுநரின் கோபத்தை பாராட்டுவதா எண்டு தெரியவில்லை.

இவர்களின் இந்த செயலை செய்தியாக படித்தபோது  என் மண்டையில் உள்ள நாலு மசிர் மேலெழுந்து புல்லரிச்சுப்போய் நிண்டதை நான் மட்டுமே அறிவேன்.

கத்தரிக்காய் கறியில புழு எப்படி வந்தது எண்டு அறிய விருப்பம் எண்டால் அந்தப்புழுவை அமெரிக்காவில் உள்ள "காபன் மரபணுப்பரிசோதனை" நிலையத்துக்கு அனுப்பியிருக்கலாம்.
(மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகளை அங்கதான் அனுப்பினவை).
அதை விட்டு விட்டு கடையை இழுத்து மூடுவது அழகல்ல.

உணவு சமைப்பதில் அதை பராமரிப்பதில் தவறு இருந்தால் அல்லது; சாப்பாட்டு கடையின் சுத்தத்தை பேணுவதில் அசண்டையீனம் இருந்தால் நடவடிக்கை எடுப்பது நியாயமானது.

உணவு சமைக்கும் போது அதிலே ஒரு புழு தவறுதலாக விழுந்துவிடுவதோ அல்லது ஒரு இலையான் விழுந்துவிடுவதோ தற்செயலானது. ஆனால் அதுகூட இயன்றவரை முற்றாக தவிர்க்கப்படவேண்டும்.

போர்க்காலத்தில்.....!
"அம்மா பச்சை அரிசியுக்குள்ள எத்தனை புழு கிடக்கும்! அதைத்தான் சத்துணவாக முந்தி பள்ளிக்கூடத்தில் திண்டு படிச்சனாங்கள்"
என்பதை எல்லோரும் அறிவோம்.

இதே ஆளுநர் அவர்கள் முடிந்தால் வவுனியாவிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ உள்ள ஒரு பெரும்பான்மை இனத்தவரின் கடையிலோ அல்லது முஸ்லிம் சகோதரர்களின் கடையிலோ போய் சாப்பிட்டு விட்டு சாப்பாட்டில்  "மசிர்" கிடந்தது எண்டு நடவடிக்கை எடுப்பாரா? என்று திரு.பொதுசனம் புறுபுறுக்கிறார்.

எது எப்படியோ? இந்த விடயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் ? என்பது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில்(O/L) சுகாதாரபாடத்துக்கு F எடுத்த பொடியனுக்கு கூட தெரியும். அந்த அடிப்படை அறிவு வடக்கு மாகாண ஆளுநருக்கு இல்லாமல் இருப்பது காலக்கொடுமையான விடயம்.

"கிளிநொச்சி பாரதி உணவகம்" மீண்டும் புதுப்பொலிவோடு நிமிர்ந்து நிற்கட்டும்.