நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, March 11, 2019

"விடுதலைக்கு போராடியவர்கள் வாழ்ந்த மண்ணை ஆட்டிவிக்கும் ஆவா!"எமதுநாட்டில், இறுதிப்போர் நிறைவுற்று சில ஆண்டுகளின் பின்னர் வடக்கு மாகாணத்தில் கிறிஸ் பூதம் என்றொரு பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்து தணிந்திருந்த நிலையில் 2011 ஆம் ஆண்டளவில் இருந்து வாள்வெட்டு வன்முறைக்கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்திருந்தது. இது, இன்று மெதுமெதுவாக வலுப்பெற்று தமக்கென்று குழுவை உருவாக்கி அதற்கொரு பெயரையும் சூட்டி தொடர்ச்சியாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருப்பதுடன் பொதுமக்கள் மத்தியில் அச்சமான நிலையையும் தோற்றுவித்திருக்கிறது.  
இந்த வாள்வெட்டு வன்முறைகளில் பல்வேறு குழுக்களும், தனிநபர்களும் ஈடுபடுகின்றனர். அவர்களில் பிரதானமாக ஆவா எனப்படும் குழுவின் வன்முறைகள்தான் யாழ்ப்பாணத்தில் அதிகம் இடம்பெறுகின்றது. இந்த, ஆவாக்குழு தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்க மட்டத்திலும் காரசாரமாக பேசப்பட்டது. அப்படியிருந்தும், ஆவா உள்ளிட்ட வாள்வெட்டு வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது சமூகப்பரப்பில் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் உருவாக்கியிருக்கின்றது. வாள்வெட்டுக் குழுக்களில் 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே அதிகமாக காணப்படுகின்றனர். இவர்கள் வாள்வெட்டுக்காரர்களாக மாற போதைப்பொருள் பாவனையையும் திரைப்படங்கள் மீதான ஈர்ப்புக்களும் ஒரு காரணமாகும். தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கதாநாயகன் அல்லது வில்லனைப் போல் தாமும் பாவனை செய்து திரைப்படப்பாணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

   
   
   
  ஆவா வாள்வெட்டுக்குழுவினர் தம்மை மக்களின் காவலர்களாக சித்திரிக்க முயற்சிப்பதை முகநூலில் இருக்கும் அவர்களது புகைப்படங்களின் மூலமாகவும், பெண்களுடன் தவறாக நடந்துகொள்பவர்களுக்கு தண்டனை கொடுப்பவர்கள் போன்று துண்டுப்பிரசுரம் வெளியிடுவதன் மூலமாகவும் உணரமுடிகின்றது. இத்தகைய செயற்பாடுகள் மூலமாக துடிப்பான இளவயது இளைஞர்கள் கவரப்படுகின்றனர். இதனை வன்முறையாளர்களின் யுக்தி என்றே கூறவேண்டும். வாள்வெட்டுக்குழுவினர் பொதுமக்களைத் தாக்குவது மட்டுமல்லாது அவர்களது வீடுகள், வாகனங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பவற்றின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதை தினச் செய்திகள் மூலமாக அறித்து கொள்ளமுடிகிறது. கடந்தகாலத்தில் காவல்த்துறையினர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் இன்றுவரை காவல்த்துறையினரால் இந்த வன்முறையாளர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அண்மைய மாதத்தில்க்கூட யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளிலும் வாள்வெட்டுத் தாக்குதல்கள், வீடுகளின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத்தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்ததுடன் சிலர் காயமடைந்தும் இருந்தனர். அந்தச் சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் பலரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அவ்வாறு இருந்தும் வாள்வெட்டு வன்முறைகள் ஓய்வின்றி இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்ந்தும் நீடித்துச் செல்வதற்கு காவல்த்துறையினரின் செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றது என்று மக்கள் கருதுகின்றனர். சில சந்தேகநபர்களை கைது செய்யாமல் அல்லது நீதிமன்றில் முற்படுத்தாமல் காவல்த்துறையினர் இலஞ்சம் பெற்றுகொண்டு அவர்களை விடுவித்து, வன்முறையாளர்களுக்கு சார்பாக செயற்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சட்டம் ஒழுங்கை காப்பாற்றி வன்முறையை கட்டுப்படுத்த வேண்டிய காவல்த்துறையினர் கைகட்டிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவோருக்கு சாதகமாக இருந்தால் ஒரு போதும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை. இதேபோல், இந்த வன்முறையாளர்களை வைத்து இனவாத அரசியல் காய்நகர்த்தல்களும் இடம்பெறுகிறது. இவ்வாள்வெட்டுக் குழுக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என்று தென்னிலங்கை இனவாத அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக அண்மைக்காலகங்களில் வாள்வெட்டுக் குழுவினரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிம்பமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் சித்திரித்திருந்தனர். ஆயினும் இந்த வாள்வெட்டுக் குழுக்களின் உருவாக்கத்தின் பின்னணியில் இராணுவத்தினர் காணப்படுகின்றனர் என்ற சந்தேகம் கடந்த காலங்களில் தமிழ் மக்களிடையில் எழுந்திருந்தது.

இந்நிலையில், அப்போதிருந்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன "மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஆவா குழுவை கோத்தபாய ராஜபக்சவே உருவாக்கினார்" என்று தெரிவித்திருந்தார். அத்துடன் 2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக இராணுவத்தில் இருந்து தப்பியோடிய முன்னாள் இராணுவவீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இராணுவம் மீதான சந்தேகங்கள் தமிழ் மக்களிடையில் வலுப்பெற்றிருந்தது. அப்போது, அரசாங்கம் சார்பில் இராணுவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அக்குற்றச்சாட்டுக்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் மறுத்துவந்தனர். விசாரணைகள் பற்றிய பேச்சுக்களும் மறைந்துபோனது ஆனாலும் ஆவா குழுவிற்கு புலிச்சாயம் பூசும் புலிப்பூஞ்சாண்டிக்கதைகள் இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

   
   
   
  இதேநேரம், "ஆவா போன்ற குழுக்களை இரு நாட்களில் அடக்கிவிடுவோம். சட்ட ஒழுங்கை மதித்தே நாம் பொறுமையாக இருக்கிறோம்" என்று யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராட்சி சிர மாதங்களுக்கு முன்னர் கருத்துத்தெரிவித்திருந்தார். சட்டத்தின் மூலம் காவல்த்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்குள் இராணுவத்தினர் தலையிட முயற்சிப்பது வடக்கில் இராணுவத்தை தொடர்ந்தும் நிலைகொள்ளவைக்கும் நோக்கத்தை கொண்டதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஜனநாயக நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து எதிர்காலத்தில் அத்தகைய செயற்பாடுகளை இடம்பெறச்செய்யாமல் தடுக்கும் மிகமுக்கிய பொறுப்பு காவல்த்துறையினரின் கைகளில்த்தான் தங்கியுள்ளது. அதில் இராணுவத்தினர் தலையிட முயற்சிப்பதானது உள்நோக்கங்களை கொண்டதாகவே அமையும். வடக்கில், யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு வன்முறைகளை முற்றாகக்கட்டுப்படுத்தும் அந்தப் பொறுப்பில் காவல்த்துறையினர் தோற்றுப்போய்விட்டனர் எனக் கூறினாலும் மிகையாகாது. அதனாலேயே இராணுவத்தினரும் தலையிட முயற்சிக்கின்றனர்.

பகல்வேளைகளிலும் வாள்வெட்டுக் குழுவினர் துணிகரமாகத்தாம் நினைத்த வன்முறைகளை நிகழ்த்துவிட்டு தப்பிச்சென்று காவல்த்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாகிவிடுகின்ற நிலைமைகளை பத்திரிகைகள் வாயிலாக தினமும் அறிகிறோம். இது, எவ்வாறு முடிகின்றது என்று கேள்வி எழுப்புவோமேயானால் அது நிச்சயம் காவல்த்துறையினரின் அலட்சியம் என்றுதான் சொல்லமுடியும். எனவே காவல்த்துறையினர் அத்தகைய அலட்சியப்போக்கில் இருந்து விடுப்பட்டு வன்முறைகளை ஒழிப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன், வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றின் ஊடாக தண்டனைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் காவல்த்துறையினர் அதிக அக்கறையுடன் செயலாற்றுவது அவசியமானது. இவற்றை காவல்த்துறையினர் சரிவரச்செய்ய தவறுவார்களாயின் வன்முறையாளர்களை தண்டிக்கும் பொறுப்பை அல்லது கட்டுப்படுத்தும் கடமையை எம்மிடம் தாருங்கள் என்று இராணுவத்தினர் தலையிடுவதும், தென்னிலங்கை அரசியல்வாதிகளினால் புலிச்சாயம்பூசும் இ்வாதக்குற்றச்சாட்டுக்களும் தொடரவேசெய்யும்.

இதேபோல், இளைஞர்களை வன்முறை பாதைகளில் செல்லவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல்த்துறைக்கு மட்டுமல்லாமல் பெற்றோருக்கும் உள்ளது. எனவே, பெற்றோர்கள் அனைவரும் அவற்றை உணர்ந்து தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புடன் இருக்கவேண்டும். வன்முறைக் குழுக்களுடன் தமது பிள்ளைகள் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்தால் அதனைக்கண்டித்து ஏதோவொரு வழியில் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும். முடியாதவிடத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியேனும் தமது பிள்ளைகளை சீர்திருத்த பெற்றோர் முன்வந்தாலும் பயனுள்ளதாக அமையும், அண்மையில் தாய் ஒருவர், "ஆவா குழுவில் உள்ள தனது மகனை எப்படியாவது மீட்டுத்தர வேண்டும், மகனை காப்பாற்ற தான் முயன்றும் அது முடியவில்லை" என்று தம்மிடம் முறையிட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்திருந்தமையை இங்கு உதாரணமாக சுட்டிக்காட்டமுடியும்.

விடுதலைக்காக போராடியவர்கள் பலர் வாழ்ந்த மண்ணில் மக்களை அச்சுறுத்தும் விதமாக வேரூன்றிச் செல்லும் வாள்வெட்டு வன்முறைக் கலாசாரத்தில் தடம்மாறிப் பயணிக்கும் எமது இளைய தலைமுறையினரை அந்த வன்முறை கலாசாரத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். எனவே வாள்வெட்டில் ஈடுபடும் இளைஞர்களை அடையாளம் கண்டுதக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றம் ஊடாக சரியான தண்டனைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு துணையாக வன்முறையில் ஈடுபடுபவர்களின் பெற்றோர்களும் இருக்க வேண்டும். அத்துடன் நின்றுவிடாமல், தண்டனைக்கு உள்ளானவர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதற்கான புனர்வாழ்வு அல்லது சீர்திருத்த திட்டத்தை முன்னெடுத்து, அவர்களை புதுமனிதர்களாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைளை அவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான், ஆவா போன்ற வாள்வெட்டு வன்முறைக் குழுக்களில் இருந்த இளைஞர்களை மீட்டு சிறந்ததொரு இளையசமுதாயத்தை உருவாக்குவதுடன், மக்களிடையில் காணப்படும் அச்ச நிலைமையையும் மாற்றியமைக்க முடியும்.

11.03.2019
#பிரகாஸ் (பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை)
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!