onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Wednesday, February 6, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலிடம் இணைந்ததற்கு காரணம் இதுதான்! ஆனால் நடந்தது என்ன?

  admin       Wednesday, February 6, 2019


தமது ஆட்சியின்போது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் “ரணிலிடமிருந்து தீர்வைப்பெறவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் விரும்பினர். அதனால் பேச்சுகளை குழப்பியடித்தனர்” என்று முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச கூறினார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று, செனட் சபையை உருவாக்குவதற்கு யோசனை முன்வைத்திருந்தோம். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் அரசியல் தீர்வை எட்டியிருக்கலாம்.

ஆனால், தீர்வை நோக்கிப் பயணிப்பதற்குரிய அக்கறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. பேச்சுவார்த்தை மேசையில் வைத்து காலையில் ஒரு விடயத்தையும், மாலையில் வேறொரு விடயத்தையும் கூறி வந்தனர்.

ரணில் ஆட்சிக்கு வந்தால் தாம் கோருவதை அவர் தருவார் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. என்னுடன் இருந்த பகைமை காரணமாக ரணிலிடமிருந்து தீர்வைப் பெறவே கூட்டமைப்பினர் விரும்பினர். ஆனால், இன்று என்ன நடக்கின்றது? பாம்பையும் தடியையும் காட்டிக் கொண்டு ரணில் ஒதுங்கி நிற்கின்றார்.

வடக்கில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாதுள்ளது. ஏன் குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர்கூட இல்லை. புதிதாக தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. எனவே, வடக்கு மக்களுக்கு அரசு என்ன செய்கின்றது?

இன்னும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனை உடன் நடத்துமாறு வடக்கு மாகாண சபை வலியுறுத்துகின்றதா? இல்லை. மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்படவேண்டும்.

இலங்கை சிறிய நாடாகும். இங்கு தனிராஜ்ஜியம் குறித்து கதைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், முதல்வரை கும்பிட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலை உருவாகும். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் கீழ்மட்டத்திலிருந்து சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு முன்வைக்கப்படும். நாம் மீண்டும் ஆட்சியமைக்க தமிழ் மக்களின் வாக்குகள் அவசியமில்லை என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை.12 ஆயிரத்து 500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தேன். காணிகளை விடுவித்தேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மொத்த நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்றே கோரியிருந்தனர். அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவைக் கோரவில்லை.

இது தொடர்பில் இரண்டு தடவைகள் சந்திப்புகளை நடத்தியிருந்தேன். 700 ரூபா வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டிருந்தது. சில தோட்டங்களில் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டது. தோட்டத் தொழிலாளர் ஒருவர் வேலைக்கு வந்தால் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வழங்குமாறு நான் கோரினேன்.

அதேவேளை, அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதும் இன்னும் பரீசிலனை மட்டத்திலேயே இருந்து வருகின்றது.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சார்ள்ஸ் சிறந்த அரச அதிகாரி. போர்க்காலத்திலும் அவர் அரச சேவையில் இருந்துள்ளார். எனவே, மேற்படி பதவியிலிருந்து அவர் நீக்கப்படக்கூடாது. நிதி அமைச்சின் முடிவு தவறாகும். அரசால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்காவிட்டால் அதை எதிர்ப்போம் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு,“இப்போதே பதில் வழங்க முடியாது. நாம் எதிரணியில் இருக்கும்போது எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த அரசையே அண்மையில் கவிழ்த்தோம்” என்றார்.

ஜெனிவாத் தொடர், தனது இந்தியப் பயணத்தின் நோக்கம் உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ச இதன்போது கருத்து வெளியிட்டிருந்தார்

logoblog

Thanks for reading தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலிடம் இணைந்ததற்கு காரணம் இதுதான்! ஆனால் நடந்தது என்ன?

Previous
« Prev Post