நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, February 4, 2019

வடக்கு மாகாணசபை தமிழருக்கு எதுவும் செய்யக்கூடாது மஹிந்தரும் கஜேந்திரகுமாரும் ஒருகொள்கையுடையோர்!

   
   
   
 
2013 தேர்தல் அறிக்கையிலும் 2015 தேர்தல் அறிக்கையிலும் 2010 தேர்தல் அறிக்கையை விட சில விசேட அம்சங்கள் பொருந்தியிருந்தன. அந்த அறிக்கைகளில் அரசியல் தீர்வை விட அபிவிருத்தியும் அடங்கியிருந்தது. இரண்டு அறிக்கைகளையும் நாங்கள் மக்கள் பார்வைக்கு வைத்தோம். ஏன் வைத்தோம்? அரசியல் நிலைப்பாடு இது! இப்படியான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு நாம் முயற்சிப்போம். இது மாகாணசபைத் தேர்தல். நாடாளுமன்றத்தில் நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவோம். ஆனால், மாகாண சபையில் அதிகாரங்கள் போதாது. மிகவும் குறைவாக உள்ளன. ஆனாலும், இருக்கின்ற அதிகாரங்களை நாங்கள் இன்ன இன்ன தேவைகளுக்காக – மக்களின் அபிவிருத்திக்காக – போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் எழுச்சிக்காக – உபயோகிப்போம் என்று நாங்கள் சொன்னோம். அதைத்தான் இன்றைக்குப் பலர் கேட்கின்றார்கள் நீங்கள் அதில் தோல்வியடைந்துள்ளீர்களே என்று.

சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் நான் செவ்வி வழங்கியிருந்தேன். அதில் அவர்கள் என்னிடம் கேட்டார்கள், கூடுதலான அதிகாரம் வேண்டும் என்று கேட்கின்றீர்களே! ஆனால், வடக்கு மாகாணசபை இருக்கின்ற அதிகாரங்களைச் சரியானமுறையில் பயன்படுத்தவில்லை என்று நாங்கள் குற்றஞ்சாட்டுகின்றோம் என்றார்கள். நான் சொன்னேன், இந்தக் குற்றச்சாட்டை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என்று. அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் நாங்கள்தான். அதை நாங்கள் விவரிக்கவில்லை. முழுமையாக விவரிக்கவில்லை. அது உண்மை.

அதற்கான காரணம் என்னவென்றால், 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றது. ஒக்ரோபர் 23 ஆம் திகதி முதலாவது அமர்வு நடைபெற்றது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நியூயேர் சிற்றியில் வருடாவருடம் தமிழ்ச் சங்கக் கூட்டம் நடைபெறுகின்றது. அதில் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகள் வருவர். இங்கிருந்தும் சிலரை அழைப்பர்.

பல விடயங்களைப் பற்றிப் பேசுவார்கள். திட்டங்களைப் பற்றிப் பேசுவார்கள் நானும் பலமுறை அழைக்கப்பட்டிருக்கின்றேன். அந்தத் தடவையும் அங்கு சென்றேன். அங்கே ஒரு நிலைப்பாடு முன்வைக்கப்பட்டது. அதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு நிலைப்பாட்டை முன்வைத்தார். எழுத்திலே முன்வைத்தார். அந்த நிலைப்பாடு என்னவென்றால் வடக்கு மாகாணசபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைபபு பெற்றிருக்கின்றது. 13 ஆவது திருத்தம் பிரயோசனமற்ற ஒன்று என்பதை வெளிப்படுத்துவதற்காக மட்டும்தான் வடக்கு மாகாணசபை காண்பிக்கப்படவேண்டுமே தவிர, அந்த மாகாணசபையைக் கொண்டு தமிழருக்கு எதுவும் செய்யக்கூடாது என்று எழுத்தில் அவர் கொடுத்தார்.

நாங்கள் இருக்கின்ற அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்வோமானால் இது போதும்தானே என்று எண்ணிவிடுவார்கள். இது போதாதென்பதை மட்டும் காட்டுவதற்காக நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவேண்டும். இது எழுத்தில் அவர் முன்வைத்த நிலைப்பாடு.

இன்னும் ஒருவர் அதே நிலைப்பாட்டைக் மதிய அமர்விலே கொண்டுவந்தார். பின்னர் மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றினேன். நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனும் அங்கு இருந்தார். நான் உரையாற்றும்போது தெரிவித்தேன், இன்று காலையிலும் மதியத்திலும் முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
   
   
   
 
நாங்கள் எங்களுடைய மக்களுக்கு முன்பாக தேர்தல் அறிக்கையாக இரண்டுவகையான நிலைப்பாடுகளை முன்வைத்திருக்கின்றோம். ஒன்று அரசியல் தீர்வு, மற்றையது இந்தக் குறைந்த அதிகாரங்களை மக்களுக்காக எப்படிப் பயன்படுத்துவோம் என்று சொல்லியிருக்கின்றோம். அதற்கு மக்கள் வாக்களித்து 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை எமக்குக் கொடுத்திருக்கின்றார்கள். அதை செய்யவேண்டிய கடப்பாடு எங்களிடத்தே இருக்கின்றது.

அடிக்கடி நாங்கள் குறிப்பிடுவது, எங்களுடைய மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்களை இராஜபக்ஷ கேட்பதில்லை செவிமடுக்கிறார்களில்லை என்று. அதே குற்றச்சாட்டை நாங்கள் உங்களிடத்தில் கேட்கலாமா, மக்கள் இதற்காகவும் வாக்களித்திருக்கின்றார்கள். அவ்வாறு மக்கள் வாக்களித்து ஆணைவழங்கிய விடயத்தை செய்யக்கூடாது என்று நீங்கள் எழுத்துமூலமான நிலைப்பாட்டை வைப்பது ராஜபக்ஷவுக்கு சமமானது என்று நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.

அப்படியான ஒரு நிலைப்பாட்டிலே துரதிஷ்டவசமாக விக்னேஸ்வரனும் பிடிபட்ட காரணத்தால்தான் வடக்கு மாகாணசபை, எதற்காக மக்கள் வாக்களித்து அனுப்பினார்களோ அந்த விடயத்தைச் செய்யவில்லை.

சட்டம், ஒழுங்கைப் பற்றி இங்கே தலைவர் பிரஷ்தாபித்தார். சட்டம், ஒழுங்கு இன்று மாகாணசபைக்குரியது. அது அரசமைப்பிலே உள்ளது. அதற்கு புதிதாக அரசமைப்பு இயற்றத் தேவையில்லை. அதை மாகாணசபை எடுத்து நிர்வகிக்கலாம் என்பது பல சட்ட நிபுணர்களுடைய அபிப்பிராயம். அப்படியான ஒருவரை நாங்கள் வடக்கு மாகாண சபைக்கு அனுப்பியிருக்கின்றோம். பல சட்டங்களை இயற்றும்படியாக. அது எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர் செய்யவில்லை. மத்திய அரசுக்கும் அதில் பங்கிருக்கின்றது. வெறுமனே மாகாண அரசு அதைச் செய்திருக்க முடியாது. ஆனால், மாகாண அரசு அதற்கான சட்டத்தை இயற்றியிருந்தால் கூடுதலான அழுத்தத்தை நாங்கள் பிரயோகித்திருக்கலாம். நாங்கள் வழக்குக் கூட செய்திருக்கலாம். ஆனால், மாகாண அரசு அதை செய்யாமல் நாங்கள் எதையும் செய்யமுடியாது. இதற்கான திட்டங்களை எல்லாம் வகுத்திருந்தோம். ஆனால், செய்யப்படவில்லை. – என்றார்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!