நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, February 2, 2019

வித்தியா கொலை விவகாரம்! பொலிஸ்மா அதிபர் மீது விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பாக முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

   
   
   
 

குறித்த வழக்கு விசாரணை இன்று (சனிக்கிழமை) ஊர்காவற்றுறை நீதிமன்றில், நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

இதன்போது, குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையொன்றை தாக்கல் செய்தனர்.

இதில் குறித்த வழக்கு விசாரணை செய்யப்படும் வழக்கு இலக்கமான NP/1/22/15 என்ற வழக்கின் கீழேயே விசாரணை செய்யப்படுவதாக குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, இவ்வழக்கின் சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி துசித் ஜோன்தாசன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தார்.

   
   
   
  குற்றப் புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்த வழக்கு இலக்கம் வித்தியா படுகொலை வழக்கு இலக்கம் எனவும், இவ்வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த வழக்கின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் 2017ஆம் ஆண்டு ஆடி மாதம் 15ஆம் திகதியே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக சரியான தகவலை மன்றுக்கு தெளிவுபடுத்துமாறும், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!