நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, February 14, 2019

செம்மணியில் 293 ஏக்கரில் நவீன நகரம்… பிரதமர் அங்கீகாரம்!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இதன்போது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிரி வரைபை சமர்ப்பித்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கியிருந்தார்.

   
   
   
  இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க- குறித்த நவீன நகர திட்டம் சிறந்த திட்டம் என கூறியதுடன், முதல்வருக்கு வாழ்த்துக்களை கூறியதுடன், அத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்கான நிதி மூலங்களை தேடுவதற்கு அந்த கூட்டத்திலேயே இணக்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் – யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமார் 293 ஏக்கர் நில பரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம். இதற்கு தேவையான 293 ஏக்கர் நிலப்பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருந்தது.

இந்நிலையில் கடந்த முறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது இந்த திட்டம் குறித்த முன்னோட்டத்தினை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அப்போதே அதனை வரவேற்ற பிரதமர் உடனடியாக தன்னை வந்து சந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டிருந்தார்.

   
   
   
  அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாவட்ட செயலர் என்.வேதநாயகன் ஆகியோருடன் நானும் பிரதமரை சந்தித்து திட்டம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம்.

அதில் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிலம் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதனையும் சுட்டிக்காட்டியிருந்ததற்கு அமைவாக, பிரதமருடனான கலந்துரையாடல் நிறைவடைந்து 2 வாரங்களிலேயே வனவள பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தேவையான 293 ஏக்கர் நிலத்தை தமது ஆளுகைக்குள் இருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.

அதற்கமைய கொழும்பிலிருந்து நிபுணர்களை அழைத்துவந்து அந்த காணிகளை அளவீடு செய்துள்ளதுடன் நவீன நகருக்கான மாதிரி ஒன்றையும் தயார் செய்துள்ளோம். அதனை இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்பித்தபோது அதனை பகிரங்கமாக வரவேற்ற பிரதமர் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என கூறினார்

இதேவேளை குறித்த நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாச்சார வலயம், கல்வி வலயம், சுகாதார அல்லது மருத்துவ வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம் வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடர்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது.


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!