அநீதி இழைக்கப்படுகிறது! நாடாளுமன்றத்தில் சிறீதரன் பகிரங்க குற்றச்சாட்டு - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

அநீதி இழைக்கப்படுகிறது! நாடாளுமன்றத்தில் சிறீதரன் பகிரங்க குற்றச்சாட்டு
தொழில்வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது எனவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

அதேவேளை, ஆணைக்குழுக்களின் விசாரணைகளும், அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆணைக்குழுக்களால் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் சிறுபான்மையினர் காணப்படுகின்றனர். அதன்படி இன, மொழி பாகுபாடின்றி பெரும்பான்மையினருடன் கைகோர்த்து பயணிக்கவும் சிறுபான்மையினர் காத்திருக்கின்றனர். ஆனால், போலி காரணங்களை முன்னிறுத்தி மறைமுகமாக மேற்கொள்ளப்படும் பாகுபாடுகள் வேதனையளிக்கின்றன.

சிறுபான்மையினர் கௌரவமாக வாழ்வதற்கு வழிவகுக்கின்ற கல்வி, வேலைவாய்ப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்படுகின்றது.

தொழில்வாய்ப்புக்கான பரீட்சைகளில் இன விகிதாசாரப்படி தமிழர்கள் அதிகளவு சித்தியடைந்த பரீட்சைகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டு, நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

ஆணைக்குழுக்களின் விசாரணைகளும், அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை இன்மையைத் தோற்றுவித்துள்ளது” என்றார்.