நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

புதிய அரசியலமைப்புக்கு சு.கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது! தயாசிறி

Thursday, January 03, 2019
Tags


புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்றால் சுதந்திரக் கட்சி ஒருபோதும் அதற்கு தடையாக இருக்காது என, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குறிப்பிட்டுள்ளார்.

எனினும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் கூட்டமைப்பினர் பொய் கூறி தமிழர்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும் சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்படும் என கூட்டமைப்பினர் கூறுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “புதிய அரசியலமைப்பு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 33 கட்டமைப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மீறி எதையும் முன்னெடுக்க முடியாது என்பதே உண்மை. வழி நடத்தல் குழுக்கூட இது தொடர்பில் இறுதி முடிவுகளை எடுக்கவில்லை.

இந்நிலையில், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் அனைத்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒன்றாகவே கருதப்படுகிறது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படுமாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் நாம் என்றும் தடையாக இருக்கவே மாட்டோம்.

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இணங்க அரசியலமைப் பொன்றை கொண்டுவர நாம் ஒருபோதும் இணங்க முடியாது.

நாடாளுமன்றில் எந்தவொரு தரப்புக்கும் பெரும்பான்மை இல்லை. இவ்வாறான நிலையில், அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட்டு அது தோற்கடிக்கப்படுமாக இருந்தால், அது சுதந்திரக் கட்சியைத் தான் இனவாதக் கட்சியாக காண்பிக்கும்.

மேலும், தெற்கிலுள்ள இனவாதிகள் புதிய அரசியலமைப்பைத் தோற்கடித்துவிட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனையே தமது தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்திவிடும்.

நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டால் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்றுத் தெரிந்தும், சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தமிழர்களை முட்டாளாக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்கிறோம். இந்த யதார்த்தத்தை தமிழர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.