நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 17, 2019

லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை: சந்தேகத்தின் பேரில் ஜேர்மனில் ஒருவர் கைது


வெளிவிவகார முன்னாள் அமைச்சரான லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடையவரென குற்றம் சாட்டப்படும் சந்தேகநபரொருவர் ஜேர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
   
   
   
 

2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்‌ஷ்மன் கதிர்காமர் ஸ்னைஃபர் துப்பாக்கியினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அந்தக் காலப்பகுதியில் கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த அவருடைய இல்லத்தின், நீச்சல் தடாகத்திற்கு அருகில் வைத்தே அவர் மீது, ஸ்னைஃபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த ஸ்னைஃபர் துப்பாக்கியின் தோட்டாக்கள் ஏற்படுத்திய காயங்களினாலேயே அவருடைய மரணம் சம்பவித்ததாக, அவரது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

   
   
   
  இந்த நிலையில், குறித்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரையே ஜேர்மனியின் பாதுகாப்பு தரப்பு இன்று கைது செய்துள்ளது.

39 வயதுடைய G.நவநீதன் என்ற நபரே இவ்வாறு ஜேர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாரென The Associated Press செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் வைத்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

   
   
   
  குறித்த நபர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலையில் ஈடுபட்ட குழுவின் ஒரு பகுதியாக இயங்கியதுடன்,  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவரெனவும் The Associated Press செய்திச் சேவையின் தகவலை அடிப்படையாக வைத்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!