நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, January 4, 2019

தடுப்பு முகாமிலிருக்கும் அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றம்! பின்னணி என்ன?

Friday, January 04, 2019
Tags


நவுருத்தீவில் அமைந்திருக்கும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறையான மருத்துவமின்றி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் குடும்பங்களுடன் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நத்தார் தினத்திற்கு முன்னதாக மூன்று குடும்பங்களையும், அவர்களது குழந்தைகளையும் அவுஸ்திரேலியாவுக்கு மாற்றியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நவுரு தடுப்பு முகாமில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஏழாக குறைந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படும் நான்கு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

நவுருத்தீவில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள் முறையான மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பதாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை நடத்துவதற்காக சுமார் இரண்டரை கோடி ரூபாயினை (5 லட்சம் அவுஸ்திரேலிய டாலர்கள்) அவுஸ்திரேலிய அரசு செலவழித்துள்ளது.

அதே சமயம், அவுஸ்திரேலிய அரசு தானாக முன்வந்து இக்குழந்தைகளை இடம் மாற்றியதா? அல்லது நீதிமன்ற உத்தரவின் கட்டயத்தால் அவுஸ்திரேலியாவுக்கு இடம் மாற்றியுள்ளதா? என்பது தெளிவாக தெரியவில்லை.

2013ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு வழியே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.

அதற்கு முன்னதாக வந்த நூற்றுக்கணக்கான அகதிகள் இன்று வரையிலும் பப்பு நியூ கினியா, நவுரு போன்ற தீவு நாடுகளில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பப்பு நியூ கினியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சிலருக்கும் பப்பு நியூ கினியா பெண்களுக்கும் பிறந்த 39 குழந்தைகள் நாடற்ற நிலையை எதிர்கொள்வதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.