நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, January 13, 2019

சவேந்திர சில்வாவிற்கெதிராக சம்பந்தன் போர்க்கொடி

Sunday, January 13, 2019
Tags


இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, நாடாளுமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இதுகுறித்து கேள்வியெழுப்பவுள்ளதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில வார இதழொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சவேந்திர சில்வாவிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முக்கிய பதவியை அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்நிலையில், கூட்டமைப்பு இதுகுறித்து கரிசனை கொண்டுள்ளதாக சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டார். யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுள் சவேந்திர சில்வா முக்கியமானவர். இவ்வாறான பின்னணியில் கடந்த செவ்வாய்க்கிழமை, இலங்கை இராணுவத்தின் 53ஆவது தலைமையதிகாரியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம் தொடர்பாக பல்வேறு மனித உரிமைசார் அமைப்புகளும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 மற்றும் 34/1 தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை குறைந்தளவான முயற்சிகளையே கொண்டுள்ளது என்ற செய்தியை, இந்த நியமனம் சர்வதேசத்திற்கு வழங்குவதாக உலக தமிழர் பேரவை குறிப்பிட்டிருந்தது.

அத்தோடு பாரிய உரிமை மீறலுடன் தொடர்புடையவர்களுக்கு அரசாங்கம் பதவிகளை வழங்குவதானது, பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பான எதிர்மறை சமிக்ஞையை வெளிப்படுத்துகின்றதென மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, காணாமல் போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில், கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட படையினர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், பதவி உயர்வு வழங்கப்படவில்லையென்றும் வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு காணப்படும்போது, யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள ஒருவருக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளமை, அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையை மீறுவதாக அமைந்துள்ளதென ருக்கி பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.