Wednesday, January 2, 2019

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் நாட்டின் நிலைமை குறித்து வெளியிட்ட சம்பந்தன்!


"புதிய அரசமைப்பின் ஊடாக முன்வைக்கப்படும் தீர்வானது ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமையவேண்டும். 

அதேவேளை, மக்களும் பிராந்திய / மாகாண அரசுகளும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களைப் பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஓர் அதிகாரப்பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும்."இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

"புதிய அரசமைப்பு கொண்டுவரப்படுகின்றபோது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவைக் கொடுப்பார்கள்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இலங்கை நட்புக் குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்தார்.

இதன்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் ஜெப்ரி வான் ஓர்டனைத் தான் தெளிவுபடுத்தியபோதே மேற்கண்டவாறு கூறியதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,"இந்தச் சந்திப்பில் அரசமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினேன். அதேவேளை, இந்த அரசமைப்பு சபையின் மீள் நியமனத்தால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையையும் எடுத்துரைத்தேன்.

அரசை மீளக் கொண்டுவருவதற்கு நாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் என்றும் குறிப்பிட்டேன்.

நாடானது ஒரு பிரதமரோ, அரசோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்பட இருந்த பாதக விளைவுகளைத் தடுக்கும் முகமாகவே அரசை மீளக் கொண்டு வருவதற்கான ஆதரவைக் கொடுத்தோம் என்று கூறினேன்.

13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசமைப்பில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்குப் பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000ஆம் ஆண்டு அறிக்கை மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அனைத்துக் கட்சி தெரிவுக்குழு மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசமைப்புக்கு அதிகளவு முன்னேற்றங்களைப் பரிந்துரைந்திருந்தன எனவும் தெரிவித்தேன்.

கடந்த முப்பது வருடங்களாகப் பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை நாட்டின் நன்மை கருதி நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் இது எனது நாடு. இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம். எனவே, என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது எனவும் தெரிவித்தேன்.

காணி விடயம் தொடர்பில் இந்தச் சந்திப்பில் பேசினோம். அரசால் பிரதேசங்களின் இன விகிதாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடியமர்வுகளை எதிர்க்கின்றோம். மாறாக இயற்கையாக மக்கள் குடியமர்வதை எதிர்க்கவில்லை எனவும் குறிப்பிட்டேன்.

தமிழ் பேசும் மக்கள் தமது நிலத்தையும் கலாச்சாரத்தையும் பேணுவதில் மிகவும் உள்ளார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஜெப்ரி வான் ஓர்டன், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் எனத் தான் எதிர்பார்த்ததாகவும், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமையால் அந்த எதிர்பார்ப்பு தகர்ந்தது எனவும், இது தொடர்ப்பில் தான் கவலையடைந்தார் எனவும் தெரிவித்தார்" - என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka