நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 15, 2019

தமிழக மீன்பிடிப் படகு மோதி சிறிலங்கா கடற்படைப் படகு சேதம்?


நெடுந்தீவுக் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களைத் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, சிறிலங்கா கடற்படையின் அதிவேக பீரங்கிப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு 500 தமிழக மீன்பிடிப் படகுகள் ஊடுருவி மீன்பிடித்துக் கொண்டிருந்தன.

அப்போது சிறிலங்கா கடற்படையின் ஷங்காய் வகையைச் சேர்ந்த ரணஜய என்ற அதிவேக பீரங்கிப் படகு, தமிழக மீன்பிடிப் படகுகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்று, தமது அதிவேகப் பீரங்கிப் படகின் மீது வேண்டுமென்றே மோதியதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இதில் கடற்படைப் படகுக்கு சேதம் ஏற்பட்ட அதேவேளை, மோதிய மீன்பிடிப் படகு, சேதமடைந்து கடலில் மூழ்கியது.

அந்தப் படகில் இருந்த 4 மீனவர்களில் மூவர் சிறிலங்கா கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக மீன்பிடிப் படகு வேண்டுமென்றே கடற்படைப் படகை மோதி சேதப்படுத்தியது என்றும், போர் நடந்த காலங்களில் கூட இதுபோன்று தமிழக மீன்பிடிப் படகு எதுவும், இவ்வாறு மோதியதில்லை எனவும் சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!